இம்ரான் ஆட்டம் முடிந்து விட்டது: நவாஸ் மகள் மரியம் கருத்து!!
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கானின் ஆட்டம் ஓய்ந்து விட்டது என மரியம் நவாஸ் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறி, பிரதமர் பதவிக்கு உயர்ந்தவர். இவர் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வௌியே உள்ளார். இந்நிலையில் அவரது கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் விலகி வருகின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ் கூறியதாவது, “மே 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இம்ரான் கான் கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவதால், கட்சி மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வௌியேறுகின்றனர். கட்சி தலைவரே ஊழல்வாதியாக இருக்கும்போது மற்றவர்கள் எப்படி இருப்பார்கள். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கானின் ஆட்டம் ஓய்ந்து விட்டது” என்று தெரிவித்தார்.