;
Athirady Tamil News

மத்திய அரசின் திட்டங்களில் அரசியல் செய்தால் கர்நாடகத்திற்கு நஷ்டம்: பசவராஜ் பொம்மை எச்சரிக்கை!!

0

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 9 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பொருளாதாரம், கல்வி, சமூக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். மோடி பிரதமரான போது நாட்டின் பொருளாதார நிலை சரியாக இருக்கவில்லை. உலக அரங்கில் இந்தியா மீதான நம்பகத்தன்மையும் குறைவாக இருந்தது. பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக பணியாற்றிய அனுபவத்தால், நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றுள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பயங்கரவாத செயல்கள் அதிகமாக நடைபெற்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது.

அனைத்து கட்சிகளின் நம்பிக்கையையும் பெற்று ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தினார். இதனால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. நிதி ஆயோக் ஏற்படுத்தப்பட்டு மாநிலங்களுக்கு 40 சதவீத வரி பங்கு வழங்கப்படுகிறது. கல்வித்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளார். உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 4 மருத்துவ கல்லூரிகள், ஐ.ஐ.டி. கல்லூரி மற்றும் கடலோர பகுதிகளின் வளர்ச்சிக்கு ரூ.1,250 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு போய் சேருவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் அரசியல் செய்தால் கர்நாடகத்திற்கு தான் நஷ்டம் ஏற்படும். கிசான் சம்மான் திட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த 54 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 400 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதார இலக்கை அடைய கர்நாடகமும் தனது பங்களிப்பை வழங்கும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.