;
Athirady Tamil News

தஞ்சை கருணாசாமி கோவிலில் 34 ஆண்டுகளுக்குப்பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு 4-ந்தேதி நடக்கிறது!!

0

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்புடைய தலமாகும். முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோவிலில் காணப்படுகிறது. கரிகாலச்சோழனுக்கு கருணை பாலித்த இக்கோவிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரம் தொடங்கி விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வைகாசி மகா உற்சவம் நடைபெறும்.

உற்சவம் முடிந்து 11-வது நாளில் பிச்சாடனார் கரந்தையில் நான்கு வீதிகளில் வலம் வருவார். பின்னர் 12-ம் நாள் கண்ணாடி பல்லக்கில் சுவாமியும், அம்பாளும், ஏழூர் பல்லக்கு புறப்படுவது வழக்கம். இந்த விழா கடந்த 1988-ம் ஆண்டு வரை அரண்மனை தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறவில்லை. இதையடுத்து மீண்டும் ஏழூர் பல்லக்கு விழாவை நடத்திட வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 24-ந் தேதி இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகிஅம்மன், சுந்தரர், தனி அம்மன், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் ஆகியோர் எழுந்தருளுகிறார்கள்.

இந்த பல்லக்குகள் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருந்தட்டான்குடி, வெண்ணாற்றங்கரை, பள்ளியக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூர், குருங்கலூர், கடகடப்பை, உதாரமங்கலம், சித்தர்காடு, மாரியம்மன் கோவில், சின்ன அரிசிகாரத் தெரு, கீழவாசல், அரண்மனை, கீழவீதி, தெற்கு, மேலவீதி, வடக்கு வீதி, சிரேஸ் சத்திரம், பூக்குளம், செல்லியம்மன்கோவில் வழியாக கோவிலை சென்றடையும். இந்த பல்லக்குகள் சப்தஸ்தான தலங்களான கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், கூடலூர் திருக்கூடலம்பதியான சொக்கநாதர் கோவில், கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவில், கீழவாசல் பூமாலை வைத்தியநாதர் கோவில் ஆகிய ஏழு ஊர்களில் உள்ள கோவில்கள் வழியாக வலம் வரும்.

34 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது. இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமையில் நடைபெற்றது. இதில் குலமங்கலம் ரவி, சுங்கான்திடல் பாபு, பள்ளியக்ரஹாரம் ராஜ்குமார் மற்றும் அந்தந்த கிராம முக்கியஸ்தர்கள், கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.