பொதுமக்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். உபநகரபிதா கிஷோர் கோரிக்கை !
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மீசாலை அல்லாரை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது. இவ் வீதியின் புனரமைப்பின் தரம் தொடர்பிலும் புனரமைப்பின் பொது பின்பற்றப்படுகின்ற நடைமுறை தொடர்பிலும் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த வீதிக்குச் சென்ற சாவகச்சேரி உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டதோடு பொதுமக்களோடும் கலந்துரையாடினர்.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தரோடு கலந்துரையாடி அப்பகுதி மக்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு ஒன்றினை உருவாக்கிய பின்னர் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதுவரை புனரமைப்பு வேலைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கண்காணிப்புக் குழு அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தனர்.









