;
Athirady Tamil News

லட்சத்தீவில் உருவான மழை மேகங்கள்- கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம் !!

0

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். இதற்கான அறிகுறிகள் கேரளாவின் லட்சத்தீவில் தென்படும். அதனை மையமாக வைத்தே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த நிலையில்தான் அரபிக்கடலில் பிபோர்ஜோய் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை உருவாகுவதற்கான பகுதிகளில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்பதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தள்ளிப்போகும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அதற்கேற்ப கடந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

தற்போது பிபோர்ஜோய் புயல் கராச்சிக்கு தெற்கே, ஓமன் நோக்கி நகர்ந்து விட்டது. இதன்காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின. இதன்மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ஆகி விட்டதை காட்டுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும். ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இது விவசாயத்திற்கு உகந்தது என்பதால் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் சாகுபடி பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்து உள்ளன. பிபோர்ஜோய் புயல் காரணமாக மழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.