;
Athirady Tamil News

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் மதுரை ஐகோர்ட்டுக்கு இல்லை- நீதிபதிகள் கருத்து!!

0

சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவித்தனர். 2 நாட்களுக்கு முன்பு 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இதன்மூலம் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே 22 மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, 2 நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்கும்படி அங்குள்ள கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இலங்கையில் இருந்து மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு தேவையான சட்டரீதியான உதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள், 1974-ம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த கோர்ட்டுக்கு இல்லை என தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.