;
Athirady Tamil News

புதின் உடன் சமாதானமா? ‘கிளர்ச்சி’ செய்ய முயன்ற வாக்னர் தலைவர் பின்வாங்கியது ஏன்?!!

0

ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது, யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது. ஆனால், தற்போது வாக்னர் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். அதிபர் புதினுடன், சமாதான பேச்சுவார்த்தைக்கு அவர் உடன்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக கூறப்பட்ட இந்த கூலிப்படையினர், ரஷ்யாவின் தென் பகுதியில் உள்ள முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாயின.

அதைத் தொடர்ந்து, அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்கத் தயாராக இருப்பதாகவும் அதன் தலைவர் பிரிகோஷின் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின், அந்த முடிவைக் கைவிட்டு, தனது படைகளை பின்வாங்குமாறு உத்தரவிட்டார்.

யுக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக களத்தில் நின்ற அதன் ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. ஜூன்23 அன்று இரவு, அந்த கூலிப்படையினர் யுக்ரேன் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து, ரோஸ்டோவ் – ஆன் – டான் நகரில் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டர்.

கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் தகவல்கள் கசிந்தன. வோரோனேஸ் நகரை உள்ளடக்கிய பரந்து விரிந்த வோரோனேஸ் ஓப்ளாஸ்ட் பிராந்தியத்தின் வழியே அப்படையினர் மாஸ்கோ நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டது.

இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து 482 கி.மீ. தெற்கே இருக்கிறது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னைச் சந்திக்காவிட்டால் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாக வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ரஷ்யா முழுவதும் பதற்றம் நிலவிய சூழலில், வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரூஸுக்கு செல்வதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சனிக்கிழமையன்று, வாக்னர் குழு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அவர்களது நடவடிக்கையை ‘கிளர்ச்சி’ எனப் பிரகடனப்படுத்தி, அவர்கள் மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து முன்னேறினர்.

ஆனால், இரவு நேரத்தில் தனது அணிவகுப்பை நிறுத்திய ப்ரிகோஜின், தனது படையினருடன் தங்கள் தளத்திற்குத் திரும்பினார்.

ரஷ்யா 24 செய்திச் சேனலின் படி, பெலாரூஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, எவ்ஜெனி ப்ரிகோஜின் உடன் பேசினார். அதற்குப் பிறகு ப்ரிகோஜின் தனது தளத்திற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ப்ரிகோஜின் தனது படையினரின் அணிவகுப்பை நிறுத்தவும் ரஷ்யாவில் நிலைமை மோசமடைவதைத் தடுக்கவும் ஒப்புக்கொண்டார்.

லுகாஷென்கோவின் அறிக்கையை மேற்கோள் காட்டி, ரஷ்யா 24 செய்தி சேனல், மாஸ்கோவை நோக்கிய அணிவகுப்பைப் பாதி வழியில் நிறுத்துமாறும் லுகாஷென்கோ கூறியதை ப்ரிகோஜின் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டது.

தங்களுக்கான பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்களுடன் நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்கு வாக்னர் கூலிப்படையின் வீரர்களால் முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தி சேனலின்படி, புதினும் இந்தத் தீர்வுக்கு ஒப்புக்கொண்டார்.

மாஸ்கோவை நோக்கிய அணிவகுப்புக்கு முன்பு, ப்ரிகோஜின் தனது நோக்கம், “ஆட்சிக்கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்று கூறியிருந்தார்.

நாள் முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தையின் விளைவாக, யெவ்ஜெனி ப்ரிகோஜின் நேற்று இரவு நேரத்தில் வாக்னர் படையின் கிளர்ச்சியை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டார்.

புதினின் நெருங்கிய கூட்டாளியான பெலாரூஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, சனிக்கிழமையன்று ப்ரிகோஜினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ப்ரிகோஜின் பெலாரூஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாக ரஷ்யா ஒப்புக்கொண்டது.

புதினின் சம்மதத்துடன் தான் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக லுகாஷென்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழுவின் தலைவருக்கு எதிரான வழக்கை கைவிட கிரெம்ளின் ஒப்புக்கொண்டது. அதோடு, வாக்னர் படையின் வீரர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ப்ரிகோஜின் மற்றும் அவரது படையினருக்கு வேறு என்னவெல்லாம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து யுக்ரேன் மீது தாக்குதல்களை நடத்த பெலாரூஸின் பிரதேசத்தை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. பெலாரூஸின் இறையாண்மையை

படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்த பெலாரஸின் பிரதேசத்தை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.

அதிகாரத்தின்மீது புதினின் பிடி பலவீனமாக இருப்பதாகக் கட்டும் எந்தவொரு அறிகுறியும், ரஷ்யாவை பெரிதும் நம்பியிருக்கும் மின்ஸ்கில் லுகாஷென்கோவின் ஆட்சிக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.
வாக்னர் படையை வாஞ்சையோடு வழியனுப்பும் ரஷ்ய மக்கள்

வாக்னர் கூலிப்படையின் வீரர்கள், ரோஸ்டோவ் நகரிலிருந்து திரும்பும்போது உள்ளூர் மக்கள் அவர்களைக் கட்டியணைத்து பிரியாவிடை கொடுப்பதை, புகைப்படங்களில் காண முடிந்தது.

சமூக ஊடக தளமான ட்விட்டரில் பரவி வரும் ஒரு வீடியோவில், வாக்னர் வீரர் ஒருவர் வானத்தை நோக்கிச் சுடுகிறார். வாக்னர் குழுவின் வீரர்கள் ரோஸ்டோவில் இருந்து வெளியேறும்போது அந்த வீரர் வானத்தை நோக்கிச் சுடுவது அந்த வீடியோவில் தெரிகிறது.

அவர்கள் திரும்பிச் செல்லும்போது தெருக்களில் வரிசையாக நின்றிருந்த பொதுமக்கள், அந்த வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்துவதைக் கேட்க முடிகிறது. கடந்த சில மணிநேரங்களில் தெற்கு நகரமான ரோஸ்டோவில் இருக்கும் பொதுமக்கள் வாக்னர் படையினருக்கு ஆதரவளிக்கும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள ராணுவ தலைமையகத்திலிருந்து வாக்னர் படை வெளியேறும்போது, பொதுமக்கள் “வாக்னர்! வாக்னர்!” என்று கோஷமிட்டு அவர்களுக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் வாக்னர் வெளியேறும்போது, நகர மக்கள் பலரும் சாலைகளில் திரண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் யுக்ரேனில் வாக்னர் வீரர்கள் போரிட்டதற்காக தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா அல்லது கைவிடப்பட்ட கிளர்ச்சிக்குத் தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா என்பது தெளிவாக இன்னும் உறுதியாகவில்லை.

வாக்னர் கிளர்ச்சி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு மிகவும் அபாயகரமானது என்று விவரிக்கிறார் பிபிசி ரஷ்ய சேவையின் ஆசிரியர் ஸ்டீவ் ரோசென்பெர்க்.

“இவ்வளவு காலம் ஆட்சியில் இருக்கும் ஒருவர், தான் யாராலும் வெல்ல முடியாத நபர் என்று நினைக்கலாம். எந்தப் பிரச்னையையும் சமாளிக்க முடியும் என்று நினைக்கலாம்.

ஆனால், 16 மாதங்களுக்கு முன்பு, ‘ரஷ்யாவை பாதுகாப்பானதாக்க சிறப்பு ராணுவ நடவடிக்கையை’ யுக்ரேனில் அதிபர் புதின் தொடங்கினார்.

ஆனால், சமீபத்திய மாதங்களில் கிரெம்ளின் மீது டிரோன் தாக்குதல்கள், மேற்கு ரஷ்யாவில் ஷெல் தாக்குதல்கள் நடந்துள்ளன.

இப்போது, மாஸ்கோவை நோக்கிச் சென்று, பிறகு அந்த முடிவைப் பெற்ற ஆயுதமேந்திய கூலிப்படையின் கிளர்ச்சி நடந்துள்ளது. விளாதிமிர் புதினால் நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாப்புத்துறை அமைச்சரை நீக்க வேண்டும் வாக்னர் படை கேட்டுக்கொண்டது.

இது அதிபர் விளாதிமிர் புதினுக்கு மிகவும் ஆபத்தான தருணம் என்று விவரிக்கிறார் ஸ்டீவ் ரோசென்பெர்க்.

யுக்ரேனில் ரஷ்ய ராணுவத்துடன் தோளோடு தோள் நின்று போரிட்ட கூலிப்படையே வாக்னர் குரூப் ஆகும்.

ப்ரிகோஜின் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டவாறு, அந்த குழுவில் சுமார் 25 ஆயிரம் வீரர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை கணிப்பின்படி, கடந்த ஜனவரியில் வாக்னர் குழுவில் அதிகபட்சமாக 50 ஆயிரம் வீரர்கள் வரை இருந்தனர். ஆனால், அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் யுக்ரேன் போரில் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

வாக்னர் குழுவின் பலம் 25,000 வீரர்கள் எனும் போது, ரஷ்ய ராணுவத்திற்கோ 8 லட்சம் வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், போரில் 2.2 லட்சம் வீர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக வாக்னர் படைகள் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக கூறப்பட்டதால், ரஷ்யாவில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.இதனால் மாஸ்கோ நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதேபோல், ரஷ்யாவின் இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலும் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அங்குள்ள ‘வாக்னர்’ தலைமையகத்தில் நேற்று காலை ரஷ்ய அதிகாரிகள் சோதனையிட்டதாக கூறப்படுகிறது. அங்கே, ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யுக்ரேன் போரில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக திகழ்ந்த, ரோஸ்டோவ் – ஆன் – டான் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதங்களுடன் வீரர்கள் காவல் காக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின.

அவர்கள் ராணுவ தலைமையகத்தை பாதுகாக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களா அல்லது வாக்னர் கூலிப்படையினரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

அந்த வீடியோக்களில் காட்டப்படும் கட்டடம் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் பதிவு செய்யப்பட்டவை என்பதை பிபிசியால் உறுதிப்படுத்த முடிந்தது.

அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அந்த நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே நீடிக்கிறது.

இதற்கு முன்னதாக வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்புவதால் வாக்னர் குழுவில் உள்ள அனைவருமே சாகவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் அனைவரும் சாகத் தயாராக இருக்கிறோம். நாங்கள் 25,000 மற்றும் கூடுதலாக 25,000” என்று அவர் அந்த ஆடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு மற்றும் வலேரி கெரசிமோவை சந்திக்க அனுமதி வழங்கப்படாவிட்டால், தலைநகர் மாஸ்கோ நோக்கி சுமார் 1,600 கி.மீ. தூர அணிவகுப்புக்கு தனது படைகள் தயாராக இருப்பதாகவும் அவர் அப்போது மிரட்டல் விடுத்திருந்தார்.

ப்ரிகோஜின் பேச்சு அடங்கிய 2 வீடியோக்களும் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்குள் பதிவு செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

அதனை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த பிபிசி முயற்சி செய்து வருகிறது.

முன்னதாக ரஷ்யாவில் ராணுவத்துடன் மோதத் துணிந்த வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக செய்தி வெளியானதால், ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடிக்குமோ என்று உச்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர்.

ரஷ்யாவில் அதிபர் புதினுக்கான சிறப்பு விமானமான Il-96-300PU விமானம் மாஸ்கோவில் இருந்து, அங்குள்ள நேரப்படி நேற்று பிற்பகல் 2.16 மணியளவில் புறப்பட்டு வடமேற்குத் திசையில் சென்றுவிட்டதாக விமானங்களின் பாதையை பின்தொடரும் FlightRadar சேவை தரவுகளை சுட்டிக்காட்டி சிலர் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள த்வெர் நகருக்கு அருகே, புதின் பயணித்த சிறப்பு விமானம் அந்த கண்காணிப்பு கட்டமைப்பில் இருந்து மறைந்துவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், அந்த சிறப்பு விமானத்தில் புதின் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும், புதின் தலைநகர் மாஸ்கோவில் நிரந்தரமாக வசிப்பதில்லை, மாஸ்கோவுக்கு வடமேற்கே அமைந்துள்ள வால்டாய் ஏரியில் உள்ள தனது பரந்து விரிந்த இல்லத்தில்தான் அதிக நேரத்தை செலவிடுவார்.

ரஷ்யாவின் ராணுவத் தலைமைக்கு எதிராக வாக்னர் குழு போர்க்கொடி தூக்கிய பிறகு ரஷ்ய அதிபர் புதின் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அனைத்து படைகளும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நடந்த நிகழ்வுகள் ‘ஒரு துரோகம்’ என்றும், ரஷ்ய மக்களை முதுகில் குத்தும் செயல் என்றும்” புதின் வாக்னரை சாடியிருந்தார்.

“இது முதுகில் குத்தும் செயல். இந்த மாதிரியான அச்சுறுத்தல்களில் இருந்து தேசத்தைக் காப்பதற்கான எங்களது நடவடிக்கை தீவிரமானதாக இருக்கும். துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள்” என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார் புதின்.

புதினுக்கு மிகவும் நெருக்கமான, அவருக்கு விசுவாசமான சகாவாக வலம் வந்த ப்ரிகோஜின், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமையல் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் ‘புதினின் சமையல்காரர்’ என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை திரும்பியது ஏன்?

யுக்ரேன் போர்க் களத்தில் ரஷ்ய ராணுவத்தின் பின்னடைவுக்கும், அதிக உயிரிழப்புகளுக்கும் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவே காரணம் என்று ப்ரிகோஜின் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார்.

“இந்த போர் தேவைப்பட்டது. அதன் மூலம் இரண்டாவது நாயகனாக அவர்உருவெடுக்க முடிந்தது. யுக்ரேனை நாஜிமயமாகாமல் தடுப்பதற்கோ, ராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கோ இந்த போர் நடக்கவில்லை. ஒரு கூடுதல் நட்சத்திரத்திற்காகவே இந்த போர் தேவைப்பட்டது.” என்கிறார் ப்ரிகோஜின். இது யுக்ரேன் மீதான தாக்குதலைத் தொடங்க ரஷ்யா முன்வைத்த காரணங்களுக்கு முரண்பாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வார தொடக்கத்தில் யுக்ரேனில் உள்ள வாக்னர் கூலிப்படையின் தளம் ஒன்றை ரஷ்ய ராணுவம் தாக்கியதாக ப்ரிகோஜின் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இதற்கு ரஷ்ய பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.