;
Athirady Tamil News

ஈரான்: 15 நாள் போராட்டத்தில் 420 பேர் பலி; அமைதிக்காக போப் வேண்டுதல்

0

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 420 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், வாடிகன் சிட்டியில் போப் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார்.

இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகளும் ஈரான் சூழல் பற்றி வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.