;
Athirady Tamil News

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? – நீங்கள் அவசியம் அறிய வேண்டிய நான்கு விஷயங்கள்!!

0

டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும்.

ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள காகித கரன்சிகள் மற்றும் உலோக நாணயங்களுக்கு மாற்றாக அவை பார்க்கப்படுகின்றன.

ஒரு நாட்டில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் பணத்தின் டிஜிட்டல் பதிப்பான இந்த கரன்சிகளை மத்திய வங்கிகள் வெளியிடுகின்றன. டாலர், யூரோ அல்லது யுவான் கரன்சிகளை போலவே இவற்றை பயன்படுத்தலாம்.
‘டிஜிட்டல் யூரோ’ திட்டம்

யூரோ கரன்சிக்கு இணையாக டிஜிட்டல் யூரோவை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் ஜூன் மாத இறுதியில் முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் டிஜிட்டல் யூரோவின் மதிப்பு, தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு யூரோ நாணயத்திற்கு இணையானதாக இருக்கும். ஐரோப்பிய மத்திய வங்கியினால் வெளியிடப்படும் யூரோ டிஜிட்டல் கரன்சி, அதன் பாரம்பரிய நாணய மதிப்புக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து அளிக்கும்.

“வரும்காலத்தில் யூரோ நாணயத்திற்கு இணையான மதிப்பிலான டிஜிட்டல் யூரோவை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஐரோப்பிய ஆணையத்தின் துணை செயல் தலைவரான வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ் கிஸ்.

“குடிமக்களின் சட்டை பைகளில் தவழும் யூரோ நாணயங்கள் மற்றும் பணத்தை போலவே, டிஜிட்டல் யூரோ வாலட்கள் அவர்களின் செல்ஃபோன்களில் விரைவில் முக்கிய இடத்தை பிடிக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.

டிஜிட்டல் யூரோ கரன்சிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான இறுதி சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல் கிடைக்கப்பெற்றால், அதன்பின் சில மாதங்களில் ஐரோப்பிய மத்திய வங்கியும் இதற்கு ஒப்புதல் வழங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 2027 இல் ‘டிஜிட்டல் யூரோ’ பயன்பாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சி Vs டிஜிட்டல் கரன்சி

பல்வேறு நாடுகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் கரன்சிகள், கிரிப்டோ கரன்சிகளுக்கு நேர் எதிரானவையாக பார்க்கப்படுகின்றன. ஏனெனில் கிரிப்டோகரன்சிகளை எந்த நாட்டின் மத்திய வங்கியும் வெளியிடுவதில்லை என்பதுடன், இவற்றின் மதிப்பும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். இதன் காரணமாகவே டிஜிட்டல் கரன்சிகள் இவற்றுக்கு எதிரானவையாக கருதப்படுகின்றன.

ஒரு நாள் விண்ணை முட்டும் கிரிப்டோகரன்சி வர்த்தகம், மறுநாள் அதலபாதாளத்திற்கு போகும். இந்த ஆபத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த சந்தையில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். அத்துடன் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை இதுவரை யாரும் முறைப்படுத்தவில்லை. ஆனால், பாரம்பரிய பணத்தை போன்றே கருதப்படும் டிஜிட்டல் கரன்சி, அதன் மின்னணு வடிவமாக உள்ளது.

டிஜிட்டல் கரன்சியை நோக்கி உலகம் சென்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இது எவ்வாறு செயல்படுகிறது, டிஜிட்டல் கரன்சியில் உள்ள சாதக, பாதகங்கள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையின் நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை.

காகித வடிவில் அச்சிடப்படும் பணத்திற்கும், உலோகங்களாலான நாணயங்களுக்கும் மாற்றாக கருதப்படும் டிஜிட்டல் கரன்சிகளை அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகள் வெளியிடுகின்றன.

தற்போதைய பணபரிவர்த்தனை நடைமுறையில், ஓர் வர்த்தக வங்கியின் உதவியுடன் தான் இருவர் தங்களுக்குள் பண பரிமாற்றம் செய்து கொள்ள இயலும். ஆனால், டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் வர்த்தக வங்கிகளின் சேவை இல்லாமல், நேரடியாக பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான வேறுபாடாக பார்க்கப்படுகிறது.

அதாவது ஒரு நபருக்கு அல்லது நிறுவனத்துக்கு ரொக்கப் பணத்தை வழங்குவதை போல, டிஜிட்டல் கரன்சி பரிமாற்றத்தை மின்னணு முறையில் ஒருவர் எளிதாக மேற்கொள்ள இயலும்.

மேலும் தற்போது ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வர்த்தக வங்கிகள் வசூலித்த வரும் சேவைக் கட்டணம், டிஜிட்டல் கரன்சி முறையில் வெகுவாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் வங்கி வசதியை பெறாதவர்களுக்கு டிஜிட்டல் கரன்சி வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

டிஜிட்டல் கரன்சியின் இதுபோன்ற நன்மைகளை கருத்தில் கொண்டு, மத்திய வங்கிகள் தங்களின் நாட்டு குடிமக்களுக்காக உலக அளவிலான வங்கிக் கணக்கை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகளை பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

ஆனால், ஒரு நாடு அல்லது நாணய மண்டலம் தனக்கான தனி சட்ட விதிமுறைகளுடன் தான் டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும் என்பதே அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தின் அடிப்படையாக உள்ளது. உலகின் பெரிய பொருளாதார நாடுகள் இதுகுறித்து இன்னமும் பகுப்பாய்வு செய்து வருவதால், டிஜிட்டல் நாணயம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படாமல் உள்ளன.

உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்திய முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. 2020இல் சீனாவின் சில பகுதிகளில் டிஜிட்டல் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சீனாவில் 260 மில்லியன் மக்கள் டிஜிட்டல் யுவானை பயன்படுத்தி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் டிஜிட்டல் கரன்சியை நடைமுறைப்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.

வாஷிங்டனில் இருந்து இயங்கிவரும் அட்லாண்டிக் கவுன்சிலின் கூற்றுப்படி, ‘உலக அளவில் மொத்தம் 130 நாடுகள் தங்கள் நாட்டு பணத்திற்கு இணையான டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர ஆராய்ந்து வருகின்றன. இவற்றில் சுமார் 65 நாடுகள் டிஜிட்டல் கரன்சியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பணிகளில் இறுதி நிலையிலோ, பரிசார்த்த முறையில் செயல்படுத்தியோ வருகின்றன அல்லது இதற்கான வழிமுறைகளை வகுத்து வருகின்றன’ என்று தெரிவித்துள்ளது.

கரீபியன் தீவுகளில் உள்ள பல நாடுகள் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 11 நாடுகளின் மத்திய வங்கிகள் டிஜிட்டல் கரன்சிகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள வெறும் 3.9 லட்சம் மக்கள்தொகையை கொண்ட சிறிய நாடான பனாமாஸ், உலக அளவில் மின்னணு பணத்தை வெளியிட்ட முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த நவீன பண பயன்பாட்டிற்கு மாறாததாலும், இதை செயல்படுத்துவதில் பிற நாடுகள் சந்தித்துவரும் நடைமுறை சிரமங்களாலும் அங்கு டிஜிட்டல் நாணய பயன்பாடு இன்னும் வேகம் எடுக்கவில்லை.

உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மற்றும் பிரேசிலும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
டிஜிட்டல் கரன்சியை கண்டுகொள்ளாத அமெரிக்கா

ஆனால் உலக அளவில் வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா, டிஜிட்டல் கரன்சியை பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை.

டிஜிட்டல் கரன்சியின் சாதக, பாதகங்களை ஆராயும்படி மார்ச் 2022 இல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்நாட்டின் பொருளாதார பிரச்னைகள் தொடர்பான ஆலோசனைகளில் டிஜிட்டல் கரன்சி பேசுபொருளாக இடம்பெறவில்லை.

அதேநேரம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் இந்த கரன்சிக்கு மாறுவது தொடர்பான முன்னோடி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2030 க்குள் டிஜிட்டல் பவுண்டை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த பணிகளில் பிரிட்டனும் இறங்கி உள்ளது.

ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தென்கொரியா மற்றும் ரஷ்யாவும் மின்னணு பணப்பரிவர்த்தனையை பரிச்சார்த முறையில் செயல்படுத்த உத்தேசித்துள்ளன.

இவ்வாறு டிஜிட்டல் கரன்சி குறித்து உலக அளவில் பொதுவாக ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் இதற்கான வரவேற்பு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று நைஜீரியா போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஈகுவடார் மற்றும் செனகல் நாடுகள் தங்களின் டிஜிட்டல் நாணய திட்டத்தை கைவிட்டுள்ளன.

வணிக வங்கிகளின் வரம்பிற்குள் இதுநாள்வரை வராதவர்களும் நிதி தொடர்பான சேவைகளை பெறுவதில் டிஜிட்டல் கரன்சி பெரும் பங்கு வகிக்கும் என்பதே இதை ஊக்குவிக்கும் நிபுணர்களின் ஆணித்தரமான கருத்தாக உள்ளது. அத்துடன் அவர்களின் பணப்பரிவர்த்தனை சார்ந்த தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு இது வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகள் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படும் என்பதால், அவற்றுக்காக வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து தற்போது பெற்றுவரும் சேவைக் கட்டணம், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் வெகுவாக குறையும் என்பது இதில் உள்ள மற்றொரு முக்கிய நன்மை என்கின்றனர் நிபுணர்கள். பணப்பரிமாற்ற வழிமுறைகள் நேரடியாக மத்திய வங்கிகளை சார்ந்தது என்பதால், வாடிக்கையாளர்களின் சேவைக் கட்டணங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் யூரோ பயன்பாடு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், அதில் மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகளுக்கான பராமரிப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை ஐரோப்பிய மத்திய வங்கி, வர்த்தக நோக்கில் மேற்கொள்ளாது என்றும் நம்பப்படுகிறது.

“பொதுமக்களால் பரவலாக ஏற்றுகொள்ளப்படுவதுடன், சிக்கனமான மற்றும் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனையும் இதனால் சாத்தியப்படும்” என்பதே டிஜிட்டல் யூரோ தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ள திட்டத்தை ஆதரிப்பவர்களின் கருத்தாக உள்ளது.

அத்துடன், டிஜிட்டல் முறையிலான ஓர் பணபரிவர்த்தனையில் ஈடுபடும் இரு நபர்களை எளிதாக கண்டறியலாம் என்பதால், நிதி சார்ந்து நடைபெறும் சில குற்றங்களை இதில் எளிதில் தடுக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

‘டிஜிட்டல் யூரோ’ நடைமுறைப்படுத்தப்பட்டால், இதற்கான சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஐரோப்பிய மத்திய வங்கி கட்டணம் எதுவும் வசூலிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் கரன்சி சேவை முற்றிலும் இலவசம் என்று இதற்கு அர்த்தமில்லை. அந்நிய செலாவணி சந்தையில் இந்த முறை செயல்படுத்தப்பட்டால், அதில் இடைத்தரகர்களால் பணியாற்றுவோரின் பங்கு மற்றும் அவர்களுக்கான சேவைக் கட்டணம் என்ன என்பது இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை. மேலும் இதில் வணிக வங்கிகளுடனான வாடிக்கையாளர்களின் தொடர்பு எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை.

அத்துடன், வங்கிகளின் செயல்பாடுகள் போதிய அளவு வெளிப்படைத்தன்மை இல்லாத நாடுகளில், டிஜிட்டல் கரன்சி முறை பின்பற்றப்படும்போது, அதில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பணபரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து தரவுகளும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை குரல்கள் ஆங்காங்கே ஒலித்து வருகின்றன.
வணிக வங்கிகள் அச்சம்

டிஜிட்டல் கரன்சி முறை முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டால், பெருமளவிலான முதலீட்டாளர்களை தாங்கள் இழக்க நேரிடும் என்றும், அதன் விளைவாக வணிக வங்கிகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் என்பதுடன் ஒரு இடத்தில் அவற்றை மூட வேண்டிய நிலையும் ஏற்படலாம் எனவும் வணிக வங்கிகளின் நிர்வாகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

ஆனால், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கரன்சியை இவ்வளவு தான் வைத்திருக்க வேண்டும் என்ற உச்சவரம்பை நிர்ணயிப்பதன் மூலம், வணிக வங்கிகள் தங்கள் முதலீட்டாளர்களை இழப்பதை எளிதாக தடுக்கலாம் என்று நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

டிஜிட்டல் கரன்சியில் அனைத்து செயல்பாடுகளும் மத்திய வங்கிகளை மையமாக கொண்டே இருக்கும். எனவே அந்த வங்கிகள் வாடிக்கையாளர்களின் பண விஷயத்தில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கலாம் என்ற அபாயமும் இதில் உள்ளதாக மற்றொரு விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் கண் இமைக்கும் நேரத்தில் இதில் பணத்தை உருவாக்கவோ, அழிக்கவோ முடியும்.

அத்துடன் நன்கு அறியப்படும் வெளிநாட்டு டிஜிட்டல் பணம், திடீரென உள்நாட்டு பணத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் அபாயமும் இதில் உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.

டிஜிட்டல் கரன்சி குறித்து இப்படி நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுதொடர்பாக ஒவ்வொரு நாடும் வகுக்கும் விதிமுறைகளின்படி. அதை அந்நாட்டின் மத்திய வங்கிகள் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை பொறுத்தே டிஜிட்டல் கரன்சியின் வெற்றி இருக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.