;
Athirady Tamil News

ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படுமா?!!

0

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதை ஒட்டி அமைந்து உள்ள புறநகர் பகுதிகளும், நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதி முக்கிய தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக மாறி உள்ளது. இதனால் அதனை சுற்றி உள்ள அனைத்து இடங்களும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக ஆவடி, ஸ்ரீபெரும்புதுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளன. ஸ்ரீபெரும்புதூரை சுற்றி உள்ள பகுதிகளில் கார் தொழிற்சாலை, அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், டயர் தொழிற்சாலை, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஏராளமாக அமைந்து உள்ளன. இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வந்து செல்ல பஸ் மற்றும் பிற வாகன போக்கு வரத்தையே பயன்படுத்துகின்றனர். அசுர வளர்ச்சி பெற்று தொழிற்சாலைகள் நிறைந்து இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் இல்லை என்பது பொதுமக்களிடம் பெரும் குறையாகவே உள்ளது.

ரெயில் பயணத்தால் பயண நேரம் குறைவு, குறைந்த கட்டணத்தில் பயணம் உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும் என்பதால் ஸ்ரீபெரும்புதூருக்கு ரெயில் நிலைய கோரிக்கை வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. தேர்தலின் போது அரசியல் கட்சியினரின் முக்கிய வாக்குறுதியாக ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலையம் இருக்கும். ஆனால் இதுவரை இதற்கு விடிவு ஏற்படவில்லை. ஸ்ரீபெரும்புதூர் மக்களின் ரெயில் நிலையம் கனவாகவே இன்னும் நீடித்து வருகிறது. சென்னை -ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம்-தாம்பரம்-திருவள்ளூர் மார்க்கமாக ரெயில் சேவை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் ஸ்ரீராமானுஜர் அவதரித்த இடம் ஸ்ரீபெரும்புதூர் ஆகும். இங்கு இவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோவில் இங்கு உள்ளது. மேலும் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு இடம் இங்கு இருக்கிறது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வதால் ரெயில் சேவை என்பது தற்போது அவசியமானது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

இதற்கிடையே பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்துக்காக, ஆவடி- ஸ்ரீபெரும்புதுார்- கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 60 கி.மீட்டர் துாரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டப் பணியை நிறைவேற்ற, மொத்தம் ரூ.839 கோடி தேவைப்படும் என்று அப்போது மதிப்பீடு செய்யப்பட்டது. எனினும் போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் இந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றது. புதிய ரெயில் பாதை திட்டத்துக்கு இறுதிக்கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ள தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த ஆண்டு ‘டெண்டர்’ வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில், ஆவடி – ஸ்ரீபெரும்புதுார் – கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரெயில் திட்டத்துக்கு ரூ.58 கோடியும் ஒதுக்கப்பட்டது.

எனவே ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலைய பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கிடையே சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. எனவே புதிய விமான நிலையத்தையும், காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில் ரெயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதும் காஞ்சிபுரம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் கூறியதாவது:- நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலைக்கு செல்ல ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பஸ் ஏறி பூந்தமல்லி சென்று பின்னர் அங்கிருந்து மேலும் ஒரு பஸ் பிடித்து மவுண்ட் ரோடு செல்கிறேன்.

இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. பஸ் செலவும் அதிகமாகிறது. சென்னைக்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ரெயில் சேவை இல்லை. இதுபற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் அமைந்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும். பயண செலவும் குறையும். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ரெயில் சேவையை என்னை போன்ற நடுத்தர மக்கள் எதிர் பார்த்து காத்து இருக்கிறோம். சத்தியா(சுங்குவார்சத்திரம்):- நான் சுங்குவார் சத்திரம் பகுதியில் இருந்து தினமும் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறேன்.

சுங்குவார் சத்திரத்தில் பஸ் ஏறி தாம்பரம் செல்லவேண்டும். எந்த நேரமும் பஸ் கிடைக்காது. பஸ்சை தவற விட்டால் ஸ்ரீபெரும்புதூருக்கு பஸ்சில் சென்று பின்னர் அங்கிருந்து தாம்பரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு ரெயில் சேவை வந்தால் எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். என்னை போன்று வேலைக்கு செல்லும் பல பேர் பயன் அடைவார்கள். முக்கியமாக பெண்கள் பலருக்கு பெரும் உதவியாக இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் ரெயில் சேவை அனைவருக்கும் ஒரு வர பிரசாதமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.