;
Athirady Tamil News

எலான் மஸ்க்குடன் உறவு முறிந்தது..! -டிரம்ப்

0

வாஷிங்டன்: எலான் மஸ்க் ஜனநாயக கட்சியினருக்கு நிதியுதவி அளித்து ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் சனிக்கிழமை(ஜூன் 7) அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ”எலான் மஸ்க்குடன் பேச விருப்பமில்லை. அவருடனான உறவி புதுப்பிக்கவும் விரும்பவில்லை. எனினும், அமெரிக்க அரசு எலான் மஸ்க்குடன் அவர் சார்ந்த நிறுவனங்களுடன்(ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங்க்) ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதில்லை. இப்போதைக்கு அதைப் பற்றிய எண்ணமில்லை. ஆனால் ஒன்று, எலான் மஸ்க் அமெரிக்க அதிபரிடம் இப்படி மரியாதை குறைவாக நடந்திருக்கக் கூடாது.

ஜனநாயக கட்சியினருக்கு நிதியுதவி அளித்து ஆதரவு நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டால் கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும். அது எந்த மாதிரியான நடவடிக்கைகளாகவும் இருக்கலாம். அதே வேளையில், எலான் மஸ்க் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து மீது விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை எதுவும் நடத்தவில்லை” என்றார்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை எலான் மஸ்க் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் டிரம்ப்புக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அமெரிக்க அரசியலில் இது பூகம்பமாக வெடித்தது.

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் பில்லியன் டாலர்கள் செலவழித்து முக்கிய மாகாணங்களில் டிரம்ப்பின் வெற்றிக்கு எலன் மஸ்க் உறுதுணையாக இருந்தார். அதன்பின், அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் எலான் மஸ்க்கை அரசு நிர்வாகத்தின் திறனை கண்காணிக்கும் துறையின் – அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ‘டோக்’ (டிபாா்ட்மென்ட் ஆஃப் கவா்ன்மென்ட் எஃபிஷியன்ஸி) பொறுப்பாளராக நியமித்தார். அப்போது அரசுப் பணியாளர்கள் ஏராளமானோர் பணி குறைப்பு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார்.

இந்த நிலையில், டிரம்ப் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள வரி விதிப்பு மசோதாவில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, மின்சார வாகனங்களுக்கான மானியம் ரத்து போன்றவை அதில் உள்ளன. இதற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த மசோதா செனட் அவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜூலை 4-க்குள் செனட் அவையிலும் இந்த பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டுவிடும் என்று டிரம்ப் உறுதிபடச் சொல்லியிருக்கிறார்.

அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதாவால் அமெரிக்காவுக்கான நிதி பற்றாக்குறை பல ட்ரில்லியன்கள் அதிகரிக்கும். ஆகவே இதை வன்மையாக எதிர்ப்பதாக எலான் மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார். அரசின் செலவினங்களை குறைப்பதற்காக தான் அத்துறையின் தலைவராக இருந்த 129 நாள்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அது வீணடித்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.