;
Athirady Tamil News

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு மரணதண்டனை !!

0

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு இன்று (12) வவுனியா மேல் நீதிமன்றத்தில் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

6 ஆண்டுகால விசாரணைகளின் பின்னர் குறித்த குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவற்குழியை சேர்ந்தவரும், வவுனியாவில் வசித்து வருபவருமான 55 வயதுடைய கந்தையா தியாகராஜா என்ற குடும்பஸ்தருக்கே மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ம் திகதி வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்துகள் சோதனையிட்டப்பட்டன.

இரவு 8.30 மணியளவில், சோதனை நடவடிக்கைகளின் பொதுப் பேருந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

சுமார் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடைய போதைப் பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது மாத்திரமல்லாமல் குறித்த, குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

மரண தண்டனை

தொடர்ந்து காவல்துறையினரால் நடாத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் சோதனைகளின் வாயிலாக கலப்படம் அற்ற தூய ஹெரோயின் கடத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, அரச சட்டத்தரணிகளின் நெறிப்படுத்தல்களின் கீழ் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், 06 வருடங்களின் பின்னர் குறித்த நபரே ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தது மட்டுமல்லாமல் விற்பனைக்காக எடுத்துச் சென்றுள்ளார் என்பதும், சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டது.

இக்குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக அவருக்குக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று (12) தீர்ப்பளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.