;
Athirady Tamil News

பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் இணைவதற்கு இலங்கை உத்தேசம் – ஆசியான் பிராந்திய மாநாட்டில் அலி சப்ரி உரை!!

0

உலகின் மிகப் பரந்துபட்ட சுதந்திர வர்த்தக வலயமான பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் இணைவதற்கு இலங்கை உத்தேசித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 30ஆவது ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவு) பிராந்திய மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகள் குழு கலந்துகொண்டது.

இம்மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, கடல் பிராந்தியப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், பாதுகாப்புடன் தொடர்புடைய நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்கள் என்பன உள்ளடங்கலாக இலங்கைக்கு ஒத்துழைப்பு அவசியமாக உள்ள துறைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இயங்க ஆரம்பித்துள்ள உலகின் மிகப் பரந்துபட்ட சுதந்திர வர்த்தக வலயமான பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் உறுப்பினராவதற்கு இலங்கை உத்தேசித்திருப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி இதன்போது குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா, புரூணை, கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 15 நாடுகளும் பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவின் ஸ்தாபக உறுப்புநாடுகளாகும்.

இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இக்கூட்டிணைவில் புதிதாக நாடுகள் இணைந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அதில் இணைவதற்கான விருப்பக்கடிதத்தை இலங்கை கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி ஆசியான் செயலகத்திடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.