;
Athirady Tamil News

திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை நடக்கிறது!!

0

ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலம் என்றும் கூறப்படுகிறது.

வருகிற தட்சிணாயண புண்ணிய காலம் கடக லக்னத்தில் பிறக்கிறது. தமிழ் ஆனி மாதம் கடைசி நாளில் அதாவது, வருகிற 17-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடக்கிறது. ஆனிவார ஆஸ்தானத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பழைய வரவு-செலவு கணக்கை முடித்து, புதிய வரவு-செலவு கணக்கு தொடங்கப்படுகிறது. அந்தக் காலத்தில் ஹத்திராம்ஜி மடத்தின் மவுந்துகளிடம் கோவில் நிர்வாகம் இருந்தது. அவர்களிடம் இருந்து அனைத்து வரவு-செலவு கணக்குகள், இருப்புகள் மற்றும் நிர்வாகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் என்ற அமைப்பை உருவாக்கி பெற்றுக் கொண்ட நாளாகும். அதன் பிறகு திருப்பதி தேவஸ்தானத்தின் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்வது, அறங்காவலர் குழு அமைக்கப்பட்டதும் ஆண்டு பட்ஜெட் மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு மாற்றப்பட்டது.

ஆனிவார ஆஸ்தானத்தன்று திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் வெள்ளித் தட்டுகளில் 6 பட்டு வஸ்திரங்களை வைத்து தலையில் சுமந்தபடி மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் பிரகாரத்தை வலம் வந்து மூலவர் ஏழுமலையானிடம் சமர்ப்பணம் செய்வார்கள். பிரதான அர்ச்சகர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுகிறது. அதில் 4 பட்டு வஸ்திரங்கள் மூலவர் ஏழுமலையானுக்கும், ஒரு பட்டு வஸ்திரம் உற்சவர் மலையப்பசாமிக்கும், மற்றொரு பட்டு வஸ்திரம் விஸ்வசேனருக்கும் அணிவித்து அலங்காரம் ெசய்கிறார்கள். அர்ச்சகர்கள் கோவிலின் தங்க வாசலில் ஒரு தங்கத்தட்டில் சிறிதளவு அரிசியை பரப்பி, அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ‘நித்ய ஐஸ்வர்யோபவ’ எனக்கூறி மூலவர் ஏழுமலையானை பிரார்த்தனை செய்வார்கள்.

அப்போது பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படும். அந்தக் காணிக்கையை மூலவர் பாதத்தில் சமர்ப்பணம் செய்யப்படும். பின்னர் அந்தக் காணிக்கையை எடுத்து பிரதான உண்டியலில் செலுத்தி புதிய வரவு-செலவு கணக்கை தொடங்குகிறார்கள். அடுத்ததாக அர்ச்சகர்கள் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமிகளின் வலது கரத்திலும் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சார்பாக கோவிலின் சாவியை கொடுப்பார்கள். அப்போது ஆரத்தி, சந்தனம், தீர்த்தம், சடாரி ஆகிய மரியாதைகளை செய்வார்கள்.

சாவி கொத்தை வாங்கி மூலவரின் பாதத்தில் வைத்து விடுவார்கள். பிறகு அந்தச் சாவியை எடுத்து மூலவரின் கதவை மூடுவதும், திறப்பதுமான நடவடிக்கையை மேற்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் ஆனி வார ஆஸ்தானம் முடிவடைகிறது. ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி 17-ந்தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.