;
Athirady Tamil News

தூசி மண்டலமான மறைமலை அடிகள் சாலை!!

0

புதுவை நகரின் பிரதான சாலையாக மறைமலை அடிகள் சாலை உள்ளது. இந்த சாலையில்தான் புதிய பஸ்நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், கால்நடைத்துறை அலுவலகம், போலீஸ் நிலையம், பி.ஆர்.டி.சி. பணி மனை, பல்வேறு ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், ஆம்னி பஸ் அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகிறது. நீண்டகாலமாக இந்த சாலையின் சுதேசி மில்லை ஒட்டியுள்ள வாய்க்கால் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்த வாய்க்காலின் மேல் இருந்த கடைகளை அகற்ற முன்வராததால் பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டது. கடந்த 2 வாரங்க ளுக்கு முன்பு இந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலின் மூடிகள் திறக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சாலை களின் நடுவே இருந்த தடுப்பு அகற்றப்பட்டு புதிய சாலை போடுவதற்கான பணிகள் தொடங்கியது. இதற்காக சாலையின் இருபுறமும் வெங்கட சுப்பாரெட்டியார் சிலையிலிருந்து சுப்பையா சிலை வரை எந்திரங்கள் மூலம் சுரண்டப்பட்டது. இதனால் சாலை முழுவதும் சரளை கற்கள் வெளிப்பட்டு வாகனங்கள் ஓட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு தூசு மண்டலமும் கிளம்புகிறது. சாலையின் மேற்புற பகுதி அகற்றப்பட்டபோது ஓரிருநாளில் பணிகள் முடி வடைந்துவிடும் என பொது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பணிகள் வாரக்கணக்கில் நீடித்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியதால் சாலையின் ஒரு புறத்தில் ஒரு பாதியை மட்டும் அமைத்துள்ளனர். இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தை கொடுக்கிறது.

வாய்க்கால் பணியை முடித்துவிட்டு அதன்பின் சாலை அமைக்கும் பணியை தொடங்கியிருக்கலாம். இதற்கிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை பஸ்நிலையத்தில் பணிகள் நடைபெறுவதற்காக மைய பகுதியை தடுப்பு வைத்து மூடியுள்ளனர். இதனால் பஸ்களை நிறுத்த முடியாமல், மறை மலை அடிகள் சாலையி லேயே பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்படுகிறது. அங்கேயே பயணிகள் ஏற்றி, இறக்கப்படுகின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தை உருவாக்கியுள்ளது. இதனால் உடனடியாக பணிகளை முடித்து தர வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த காலங்களில் ஒரே இரவில் சாலையின் மேற்பரப்பை அகற்றி புதிய சாலை அமைக்கப்பட்டு வந்தது. ஏன் அதேபோல தற்போது பணிகள் நடக்க வில்லை எனவும் பொது மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.