;
Athirady Tamil News

திரைப்பட திருட்டை தடுக்க கடுமையான விதிகள்.. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!!

0

திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் சினிமா துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு இதற்காக கடுமையான விதிகளுடன் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருட்டுத்தனமாக திரைப்படங்களை பிரதி எடுப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும், திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யுஏ சான்றிதழ் வழங்கும்போது, அதை வயதுவாரியாக யுஏ7+, யுஏ13+ மற்றும் யுஏ16+ என மூன்று பிரிவுகளாக வழங்கவும் இந்த சட்டத்தில் உள்ளது. முன்னதாக இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றபோது மணிப்பூர் விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

விவாதத்திற்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பேசும்போது, திரைப்பட திருட்டு செயல்களால் (திரைப்பட பைரசி) திரையுலகம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்றார். ‘பைரசியால் ஏற்படும் இந்த இழப்பை தடுக்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. திரைத் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த சட்டம் நிறைவேற்றும். திரைப்பட திருட்டு புற்றுநோய் போன்றது, அதை வேரோடு அறுப்பதற்கு இந்த மசோதா முயற்சி செய்யும்’ என்றும் அனுராக் தாக்கூர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.