தலித் இளைஞரைத் திருமணம் செய்த கர்ப்பிணி மகளைக் கொன்ற தந்தை!
கர்நாடகத்தில் தலித் இளைஞரைத் திருமணம் செய்த மகள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது தந்தை அடித்துக் கொலை செய்துள்ளார்.
மேலும், தலித் இளைஞர் மற்றும் அவரது பெற்றோர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இனாம்-வீரப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மான்யா (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இதற்கு மான்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஹவேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருவரும் சில மாதங்களாக தங்கியிருந்தனர்.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி இருவரும் சொந்த கிராமத்துக்கே திரும்பியுள்ளனர். இதையடுத்து, மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா, அடிக்கடி விவேகனந்தாவின் வீட்டுக்குச் சென்று பிரச்னையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு விவேகனந்தாவின் வீட்டுக்குச் சென்ற பிரகாஷ் மற்றும் அவரது இரண்டு மகன்கள், இரும்பு கம்பிகள் மற்றும் ஆயுதங்களால் அனைவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த மான்யா, விவேகானந்தா மற்றும் அவரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 மாதம் கர்ப்பமாக இருந்த மான்யா சிகிச்சைப் பலனின்றி பலியானார்.
இதையடுத்து, மான்யாவின் தந்தை பிரகாஷ் மற்றும் சகோதரர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.