;
Athirady Tamil News

சாதனை என்ற பெயரில் ஆபத்தான போட்டோசூட்: 30 வயதில் உயிரைவிட்ட பிரான்ஸ் பிரபலம்!!

0

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி (30). இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு உடையவர்.

வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது இவரது வாடிக்கை. இவருடைய இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். ரெமி பலமுறை ஹாங்காங் நாட்டிற்கு சென்று அங்குள்ள உயரமான கட்டிடங்களிலிருந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். சென்ற வாரம், ஹாங்காங் மத்திய பகுதியில் உள்ள ட்ரெகன்டர் சாலைக்கு ரெமி சென்றார். அங்குள்ள ட்ரெகன்டர் டவர் எனும் ஒரு மிக உயரமான கட்டிடத்தில் இருந்து படம் பிடிக்கும் நோக்கில், காவலாளியிடம் ஒரு நண்பனை பார்க்க உள்ளே செல்வதாக பொய் சொல்லி உள்ளே சென்றார். லிஃப்டில் ஏறி 49-வது மாடியை அடைந்து அங்கிருந்து வெளியே இறங்கி மாடிக்கு சென்றார்.

மொட்டை மாடிக்கான கதவின் பூட்டை அவர் உடைத்து கொண்டு மேல் மாடி வரை சென்றார். இவர் அங்கிருந்து பல ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது திடீரென நிலை தடுமாறினார். இதனால் உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார். இதை கண்ட உள்ளேயிருந்த பணிப்பெண் திடுக்கிட்டு காவல்துறையை அழைத்தார். ஆனால் உதவி கிடைக்கும் முன் 68-வது மாடியிலிருந்து ரெமி தவறி விழுந்தார்.

மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்தபோது ரெமி உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது. அவர் அருகே அவர் எடுத்த பல புகைப்படங்களை கொண்ட அவரது கேமிரா அருகே கிடந்தது. பிரான்ஸ் நாட்டு அடையாள அட்டை ஒன்று அருகே இருந்ததை கொண்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. மரணத்திற்கான காரணத்தை ஹாங்காங் காவல்துறையினர் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஜூலை 24-ம் தேதி ரெமியின் கடைசி பதிவில் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியின் வான்வழி காட்சியை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.