;
Athirady Tamil News

தாலிபன்கள் பொது இடத்தில் தண்டனை கொடுப்பது ஏன்?

0

“கால்பந்து மைதானத்தில் கசையடி தண்டனைக்காக முதல் நபரை தாலிபன்கள் முன்னிறுத்தும் போது எனது இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கிவிட்டது. அதனை என்னால் உணர முடிந்தது. இது கனவோ, அல்லது படக் காட்சியோ அல்ல. என் கண் முன்னே உண்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை”

ஆப்கனைச் சேர்ந்த 21 வயதேயான ஜூம்மா கானின் (பாதுகாப்பு கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) வார்த்தைகள் இவை.

2022, டிசம்பர் 22-ம் தேதி மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள தரின்கோட் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மத்தியில் 22 பேரை தாலிபன்கள் அழைத்து வந்ததை இவர் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த 22 பேரில் 2 பெண்களும் அடங்குவர். அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அதற்கு முந்தைய தினமே அந்த நகரில் உள்ள மசூதிகள் மற்றும் ரேடியோ வாயிலாக மக்களுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தெரியப்படுத்திய தாலிபன்கள், மக்கள் பாடம் கற்றுக் கொள்வதற்காக இதனை நேரில் பார்க்க வருமாறு அறிவுறுத்தினர்.

பொதுவாக தண்டனைகளை நிறைவேற்ற பெரிய விளையாட்டு மைதானங்களையே தாலிபன்கள் தேர்வு செய்கின்றனர். ஆப்கானிஸ்தானில் 1990-களில் தாலிபன்கள் முதலில் ஆட்சியைக் கைப்பற்றிய போது பின்பற்றிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி இது.

தரின்கோட் மைதானத்தில் 18 ஆயிரம் பார்வையாளர்கள் இருந்ததாக தாலிபன் அரசு கூறுகிறது. ஆனால், உண்மையான எண்ணிக்கை அதற்கும் கூடுதலாக இருக்கும் என்கிறார் ஜூம்மா கானோ.

“மைதானத்தின் நடுவில் புல் தரையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அமர வைக்கப்பட்டனர். அது ஒரு சுட்டெரிக்கும் வியாழக்கிழமை. அவர்களை காப்பாற்றுமாறு கடவுளிடம் அங்கே கூடியிருந்த மக்கள் வேண்டிக் கொண்டனர்” என்று பிபிசியிடம் ஜூம்மா கான் கூறினார்.

கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டதை தாலிபன்களின் உச்சநீதிமன்றம் ட்விட்டர் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

பிபிசியிடம் பேசிய தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், “ஷரியா சட்டத்தின்படி, இதுபோன்று தண்டனை அளிக்க எங்கள் தலைவர் கடமைப்பட்டவர். பொது இடத்தில் நிறைவேற்றப்படும் தண்டனைகளை மக்கள் பார்க்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் கற்க வேண்டும் என்று குர்ஆனில் அல்லா கூறியுள்ளார். ஷரியா சட்டத்தின்படி இதனை நிறைவேற்றுவது எங்களது கடமை” என்று கூறினார்.

“அன்றைய தினம் கசையடி தண்டனை பெற்ற ஆண்கள் அனைவரும் 18 முதல் 37 வயது வரையிலானவர்கள். அவர்களுக்கு 25 முதல் 39 கசையடிகள் வரை தரப்பட்டன.” என்கிறார் ஜூம்மா கான்.

“அவர்களில் சிலர் அழுது கொண்டே இருந்தார்கள். சிலர் கதறினார்கள். ஒருசிலர் கசையடி வலியை தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தார்கள். அவர்களில் 39 கசையடிகளைப் பெற்றவர் எனது உறவினர். திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. 20 அடிகளுக்குப் பிறகு உடல் மரத்துப் போய்விட்டது, வலியை உணரவில்லை என்று அவர் கூறினார். ” என்று ஜூம்மா கான் தெரிவித்தார்.

ஆனால், அன்றைய தினம் 2 பெண்களையும் பொது இடத்தில் தாலிபன்கள் அடிக்கத் தயாரானது போல் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்துப் பிறந்தர் இந்த ஜூம்மா கான். அந்த தாக்குதல் எதிரொலியாக, அமெரிக்காவும், நேட்டோவும் படையெடுத்து வந்து, தாலிபன்களின் முதல் ஆட்சிக் காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன.

1990களில் தங்களது முதல் ஆட்சிக் காலத்தில் தாலிபன் வீரர்கள் மக்களை பொது இடத்தில் எப்படி அடிப்பார்கள்? கை, கால்களை எப்படி துண்டிப்பார்கள்? அல்லது மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள் என்று மூத்தவர்கள் சொல்லி அவர் கேள்விப்பட்டுள்ளார். ஆனால், அந்த வன்முறையை கண்ணெதிரே அவர் பார்ப்பது இதுவே முதன் முறை.

மக்கள் கால்பந்து மைதானத்தை விட்டு விரைந்து வெளியேற முயற்சி செய்ததாக அவர் கூறுகிறார்.

“அவர்களில் பெரும்பாலானோர் என்னைப் போல இளைஞர்கள். தாலிபன் வீரர்கள் எங்களை வெளியேற அனுமதிக்கவில்லை. ஆனாலும் சுவர்கள், தடுப்புகள் மீதேறி பலரும் வெளியேறிவிட்டனர்” என்கிறார் அவர்.

ஆப்கானிஸ்தானின் சட்டப்பூர்வ ஆட்சியாளர்களாக உலகின் நம்பிக்கையை வென்றெடுக்க முனைப்பு காட்டும் தாலிபன் அரசு, இதுபோன்ற தண்டனை நிறைவேற்றத்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்படுமோ என்று அஞ்சுவது போல் தெரிகிறது. வெளிநாடுகளின் கவனத்தை ஈர்க்கக் கூடும் என்று கருதி யாருமே இதனை பதிவு செய்வதையோ, செய்தி வெளியிடுவதையோ தாலிபன்களின் சுப்ரீம் தலைவர் முல்லா ஹிபதுல்லா அகுன்ட்சாதா தடை செய்துள்ளார்.

ஆனால், ஜூம்மா கான் இந்த நிகழ்வை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து பிபிசிக்கு அனுப்பி விட்டார். மற்ற சில பார்வையாளர்கள் நிகழ்வுகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் அவை உடனடியாக வைரலாகிவிட்டன.

அன்றைய தினம் நான் பார்த்த காட்சி என்னை இன்னும் அச்சுறுத்துகிறது. அதுபோன்ற நிலை எனக்கும் ஒரு நாள் வருமோ? என்று அஞ்சுகிறேன் என்கிறார் கான்.

“இப்போது ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன். தாடி வளர்த்துள்ளேன்” என்று அவர் கூறுகிறார்.

பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றம் குறித்த தாலிபன் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் தண்டனை குறித்த அறிவிக்கைகளை வெளியிட தொடங்கிய 2022 நவம்பர் முதல் இதுவரை இதுபோன்ற 50 நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அதில் 346 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை பிபிசி கண்டுபிடித்துள்ளது.

தண்டனைக்கு ஆளாகும் நபர் ஆணா, பெண்ணா என்பதை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரியப்படுத்துவதில்லை. ஆனால், 51 பேர் பெண்கள் என்றும், 233 பேர் ஆண்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய 60 பேர் யார் என்று தெரியவில்லை.

அவர்கள் அனைவருக்கும் கசையடி வழங்கப்பட்டது. சிலர் சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.

தென்மேற்கு ஆப்கானிஸ்தானில் ஃபரா என்ற இடத்திலும், கிழக்கு லாக்மான் மாகாணத்திலும் தலா ஒருவர் என 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்கன் முழுவதும் நடக்கும் குற்ற வழக்குகளை கண்காணித்து சட்டம் சரிவர நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யுமாறு நீதித்துறை அமைப்புகளுக்கு தாலிபன் சுப்ரீம் தலைவர் ஆணையிட்ட நவம்பர் 13-ம் தேதிக்குப் பிறகு இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்துளளன.

ஷரியா சட்டத்தின் பிரதிபலிப்பாக அமைந்த ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய நீதி பரிபாலன அமைப்புப் படி இதுபோன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாக தாலிபன் அரசு கூறுகிறது.

திருட்டு, கொலை, பாலியல் குற்றங்கள், ஆண்களுக்கு இடையிலான பாலியல் தொடர்பு, சட்டத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் தொடர்புகள், ஊழல், வீட்டை விட்டு ஓடிப் போவது போன்ற 19 வகையான தண்டனைக்குரிய குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தண்டனைக்குரிய குற்றங்கள் அனைத்துமே சரியாக வகைப்படுத்தப்படவில்லை. சிலவற்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் என்கிற வகையில் இருக்கிறது.

திருட்டுக் குற்றம்சாட்டப்பட்ட பலரும் 39 கசையடி தண்டனையைப் பெற்றுள்ளனர். சிலருக்கு கூடுதலாக 3 மாதங்கள் முதல் ஓராண்டு காலம் வரை சிறைத் தண்டனையும் உண்டு.

‘ஸினா’ என்ற வகைப்பட்டின் கீழ் பாலியல் குற்றங்களை தாலிபன்கள் வைத்துள்ளனர். அதில் ‘சட்டவிரோத பாலியல் தொடர்பு’ ‘தார்மீகத்திற்கு எதிரான நடத்தை’ போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.

7 நிகழ்வுகளில் வீட்டை விட்டு வெளியேறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், குடும்ப வன்முறையை எதிர்கொண்டு, சிறு வயதிலேயே கட்டாய திருமணம் செய்து கொண்ட மிகவும் பலவீனமான பெண்கள் ஆவர். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கும், சர்வதேச பார்வையாளர்களுக்கும் கவலை தரக்கூடியதாக இருக்கிறது.

தாலிபன் உச்சநீதிமன்ற அறிவிக்கைகளில் 6 முறை ‘லிவாடத்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுளள்து. அது ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குறிக்கிறது. அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது ஆப்கானிஸ்தான் ஷரியா சட்டம்.

ஆப்கானிஸ்தானில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 21 மாகாணங்கள் பொது இடங்களில் தண்டனைகளை நிறைவேற்றியுள்ளன. அவற்றில் சில மாகாணங்கள் மட்டும் அதிக முறை இதனைச் செய்துள்ளன.

முதல் இடத்தில் உள்ள கிழக்கு லாக்மான் மாகாணம் 7 முறை இதுபோன்று தண்டனைகளை நிறைவேறியுள்ளது. பக்தியா, கோர், பர்வான், காந்தஹார் மாகாணங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஹெல்மண்ட் மாகாணம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கே 48 பேர் பொது இடத்தில் தண்டனை பெற்றுள்ளன. படக்ஷான் மாகாணத்தில் 32 பேரும், பர்வானில் 31 பேரும், கோரில் 24 பேரும், காந்தஹார் மற்றும் ரோஸ்கனில் 22 பேரும், தலைநகர் காபூலில் 21 பேரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கூறிய தரவுகள் அனைத்துமே தாலிபன் உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிக்கைகளின் அடிப்படையில் திரட்டப்பட்டவை. பதிவு செய்யப்படாத மற்ற நிகழ்வுகளும் இருக்கக் கூடும்.

இதுபோன்ற செயல்களை நிறுத்துமாறு ஐ.நா., மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகள் கேட்டுக் கொண்டாலும், தாலிபன்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை.

தாலிபன்கள் தங்களது அதிகாரப்பூர்வ அறிவிக்கைகளில், பொது இடத்தில் தண்டனையை நிறைவேற்றுவது மற்றவர்களுக்கு ஒரு பாடம் என்றே குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் குற்றங்களைத் தடுக்கலாம் என்பது அவர்களின் வாதம்.

ஆனால், ஜூம்மா கான் போன்று அதனை நேரில் பார்த்த பலரும் அந்த அச்சமூட்டும் நிகழ்வுகள் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். தண்டிக்கப்பட்ட நபர்கள் அவமானம் தாங்காமல் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்களாக உணர்கின்றனர் என்று ஜூம்மா கான் கூறுகிறார்.

பிபிசிக்கு அளித்த பதிலில் தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், “மக்களின் மன ஆரோக்கியத்தை அல்லா பார்த்துக் கொள்வார். ஷரியா சட்டத்திற்கு எதிராக நாங்கள் நடக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.