;
Athirady Tamil News

பட்ஜெட் ரூ. 32,500 கோடி.. 2339 கிமீ பாதை உருவாக்க புதிய திட்டம்.. மத்திய குழு அனுமதி..!

0

பிரதமரின் தலைமையில் இன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCE) ரெயில்வே துறையில் ரூ.32, 500 கோடி மதிப்பிலான இருப்பு பாதைகளை அமைக்கும் 7 “மல்டி டிராக்கிங்” திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இத்திட்டங்கள் உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களை உள்ளடக்கி கட்டமைக்கப்படும். இத்திட்டத்தின்படி ரூ.32,500 கோடி செலவில் இந்திய ரெயில்வேயின் 2339 கிலோமீட்டர்கள் இருப்பு பாதைகள் உருவாக்கப்படும். இந்த 9 மாநிலங்களில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் இதன் மூலம் உறுதி செய்யப்படும்.

இருப்பு பாதைகளை அதிகரித்தல், ரெயில் போக்குவரத்தை சீராக்குதல், பயணிகளுக்கு நெரிசலை குறைத்தல் மற்றும் பயணிகள் தடையின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்தல் ஆகியவை இந்த திட்டங்களின் நோக்கமாகும். உணவு தானியங்கள், உரங்கள், நிலக்கரி, சிமென்ட், இரும்பு, ஸ்டீல், எக்கு, கச்சா எண்ணெய், சுண்ணாம்பு, சமையல் எண்ணெய் முதலிய முக்கிய பொருட்களின் விரைவான போக்குவரத்திற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் வருங்காலங்களில் ரெயில்வே துறை 200 மில்லியன் டன் சரக்குகளை கூடுதலாக எடுத்து செல்ல முடியும்.

பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, துறைமுக வழியான கப்பல் போக்குவரத்து மற்றும் உடான் விமான சேவை உட்பட பலவித போக்குவரத்து கட்டமைப்புகளையும், வழிமுறைகளையும் ஒன்றிணைத்து சீரான, சிறப்பான மற்றும் மக்களால் எளிதில் விரைவாக பயன்படுத்த கூடிய ஒரு போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் பிரதம மந்திரி கடி ஷக்தி தேசிய திட்டம் (PM-Gati Shakti National Master Plan) எனும் மிகப்பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.