;
Athirady Tamil News

200 ஆண்டுகள் பழமையான குர்ஆன் கையெழுத்துப் பிரதியை அழிவிலிருந்து மீட்ட கட்டுமானப் பணியாளர்கள்!!

0

தென்னாப்பிரிக்கா தலைநகர் கேப் டவுனில் போ காப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க அவ்வல் மசூதி அமைந்துள்ளது. இங்கு 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான குர்ஆனை பெருமையுடன் பாதுகாத்து வருகின்றனர் அந்நகரைச் சேர்ந்த முஸ்லிம்கள்.

டச்சுக்காரர்களால் ஆப்பிரிக்காவின் தென்பகுதிக்கு அடித்து விரட்டப்பட்ட இந்தோனீசியாவை சேர்ந்த இமாம் ஒருவரால் கைப்பட அழகாக எழுதப்பட்டது என்பதே அந்த குர்ஆன் பிரதியின் சிறப்பு.

கோ காப்பில் அமைந்துள்ள அவ்வல் மசூதி, 1980களில் புனரமைக்கப்பட்டது. அப்போது மசூதிக்குள் இருந்த ஒரு அறையில் காகிதங்கள் நிரம்பப் பெற்ற பை ஒன்றைக் கட்டுமானப் பணியாளர்கள் கண்டெடுத்தனர்.

துவான் குரு அல்லது ஆசிரியர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் இமாம் அப்துல்லாஹ் இப்னு காதி அப்துஸ் சலாம்.

டச்சு காலனி ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராடியதன் விளைவாக, 1780ஆம் ஆண்டு இந்தோனீசியாவின் டிடோர் தீவில் இருந்து தென்னாபிரிக்காவின் கேப் டவுனுக்கு அரசியல் கைதியாக நாடு கடத்தப்பட்டார் இமாம்.

அவர் கேப் டவுனுக்கு வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மனதின் நினைவிலிருந்து குர்ஆனை எழுதினார் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

“மசூதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த பை மிகவும் தூசு நிறைந்ததாக இருந்தது. மசூதிக்குள் இருந்த அந்த அறைக்குள் சுமார் 100 ஆண்டுகளாக யாரும் இருந்ததில்லை எனத் தோன்றுகிறது,” என்று அவ்வல் மசூதி குழுவின் உறுப்பினரான காசிம் அப்துல்லா பிபிசியிடம் கூறினார்.

காகிதங்கள் அடங்கிய பையுடன், துவான் குரு எழுதிய மத நூல்கள் அடங்கிய பெட்டி ஒன்றும் மசூதிக்குள் இருந்ததை கட்டுமானப் பணியாளர்கள் அப்போது கண்டெடுத்தனர் என்றும் அவர் கூறினார்.

புத்தகமாக வடிவமைக்கப்படாத, குர்ஆன் எழுதப்பட்டிருந்த காகிதங்களின் சில பக்கங்களின் விளிம்புகள் மட்டும் சேதமடைந்திருந்தன. மற்றபடி எண்ணில் அடங்காத அந்த காகிதங்கள் பல ஆண்டுகள் கழித்தும் நல்ல நிலையில் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்தக் காகிதங்களில் கருப்பு மற்றும் சிவப்பு மை கொண்டு, அனைவரும் படிக்கக்கூடிய விதத்தில், அரேபிய மொழியில் குர்ஆன் தெளிவாக எழுதப்பட்டிருந்தது.

கடந்த 1694ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக அறியப்படும் மிகவும் மதிப்புமிக்க பாரம்பரிய கலைப் பொருளுக்கு இணையான, குர்ஆன் எழுதப்பட்ட காகிதங்களைப் பாதுகாப்பது கேப் டவுனை சேர்ந்த முஸ்லிம்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருந்தது.

அத்துடன் அதில் இடம்பெற்றிருந்த 6,000க்கும் மேற்பட்ட வசனங்களை கொண்ட அனைத்து பக்கங்களையும் சரியான வரிசையில் அடுக்குவதும் அவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது.

அதையடுத்து, குர்ஆன் பக்கங்களை புத்தகமாக வடிவமைக்கும் பணியை, கேப் டவுனில் செயல்பட்டு வந்த முஸ்லிம் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மறைந்த மௌலானா தாஹா கரான், பல உள்ளூர் குர்ஆன் அறிஞர்களுடன் இணைந்து மேற்கொண்டார்.

அவ்வல் மசூதியில் கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதியின் பக்கங்கள் அனைத்தையும் ஒழுங்கமைத்து நூலாக வடிவமைக்கும் பணியை முடிக்க, அந்த குழுவினருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

கடந்த 1794இல் துவான் குருவால் நிறுவப்பட்ட, தென்னாப்பிரிக்காவின் முதல் மசூதியான, அவ்வல் மசூதியில், தற்போதும் அங்கு கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் புத்தகமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விலைமதிப்பற்ற இந்த நூலைத் திருட மேற்கொள்ளப்பட்ட மூன்று முயற்சிகள் தோல்வியடைந்தன. அதையடுத்து, தீ விபத்தில் சேதமடையாதபடி, குண்டு துளைக்காத உறைக்குள் வைத்து குர்ஆனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மசூதி நிர்வாகக் குழு, 10 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டது.

கேப்டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அவ்வல் மசூதிக்கு, 2019இல் விஜயம் செய்த இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன்.

துவான் குருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் ஷஃபிக் மார்டன். அவரது கூற்றின்படி, ராபன் தீவில் உள்ள சிறையில்தான் துவான் குரு அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போதுதான் அவர், குர்ஆனின் ஐந்து பிரதிகளில் முதல் பிரதியை எழுதத் தொடங்கினார் என்று மார்டன் நம்புகிறார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும், தனது குர்ஆன் எழுத்துப் பணியை அவர் தொடர்ந்தார்.

குறிப்பிட்ட இந்த சிறைச்சாலையில்தான், நிறவெறி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த நெல்சன் மண்டேலாவும் 1960களில் இருந்து 1980கள் வரை சிறைபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது கேப் டவுன் மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குர்ஆன் நகல்களின் பெரும்பகுதியை அவர் தனது 80 மற்றும் 90 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதியிருப்பார் என்றும் நம்பப்படுகிறது. மேலும், துவான் குருவின் முதல் மொழி அரபு இல்லை என்பதால், இந்த மொழியில் அவர் குர்ஆனை எழுதியுள்ளது வியக்கத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது.

மார்டனின் கூற்றுப்படி, துவான் குரு ராபன் தீவில் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 69 வயதாக இருந்தபோது, 1780 முதல் 1781 வரை முதல் முறையும், 1786 மற்றும் 1791களில் இரண்டாவது முறையும் அவர் சிறைவாசம் இருந்தார்.

“தன்னைச் சுற்றியிருந்த அடிமைகளை ஊக்கப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, துவான் குரு குர்ஆனை எழுதியிருப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறுகிறார் மார்டன்.

அத்துடன், “குர்ஆனின் நகலை எழுதுவதன் மூலம், தனது மக்களுக்கு கல்வியையும், கண்ணியத்தையும் கற்பிக்க முடியும் என்பதை உணர்ந்தவராக அவர் இருந்தார்,” என்றும் மார்டன் கூறுகிறார்.

“நீங்கள் ஆவணக் காப்பகத்திற்குச் சென்று டச்சுக்காரர்கள் பயன்படுத்திய காகிதத்தைப் பார்த்தால், அது துவான் குரு குர்ஆன் எழுத பயன்படுத்திய காகிதத்தைப் போன்றோ, அல்லது அநேகமாக அதே காகிதமாகவோ இருக்கலாம்,” என்கிறார் அவர்.

“மூங்கிலை கொண்டு தானே வடிவமைத்த பேனாவில் கருப்பு மற்றும் சிவப்பு மை கொண்டு துவான் குரு குர்ஆனை எழுதியிருப்பார்; பேனாவுக்கான மைகளை டச்சு காலனி ஆதிக்க அதிகாரிகளிடமிருந்து அவர் எளிதில் பெற்றிருக்கலாம்.”

தென்னாப்பிரிக்க இஸ்லாமிய வரலாற்றின் விரிவுரையாளரான ஷேக் ஓவைசி, கேப் டவுனில் கையால் எழுதப்பட்ட குர்ஆன்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தவர். டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் தென்னாப்பிரிக்கா இருந்தபோது, அங்கு கைதிகள் மற்றும் அடிமைகளாக இருந்த முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பாதுகாக்க துவான் குரு தூண்டப்பட்டிருக்கலாம் என்று ஓவைசி நம்புகிறார்.

தென்னாப்பிரிக்காவில் அடிமைகள் மற்றும் கைதிகளால் முதன்முதலில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

“டச்சு ஆட்சியாளர்கள் பைபிளை பிரசங்கித்து, முஸ்லிம் அடிமைகளை மதம் மாற்ற முயன்றபோது, துவான் குரு குர்ஆனின் பிரதிகளை எழுதி, அதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து மனப்பாடம் செய்ய வைத்தார்.

நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு, அவரின் விடாமுயற்சியை பறைசாற்றுவதாக உள்ளது. அத்துடன் இது கேப் டவுனுக்கு அடிமைகளாகவும், கைதிகளாகவும் அழைத்து வரப்பட்டவர்களின் கல்வி நிலையைக் காட்டுவதாக இருந்தது,” என்றும் கூறுகிறார் ஓவைசி.

குர்ஆனை தவிர, மரிஃபத் வல் ஈமான் வல் இஸ்லாம் (நம்பிக்கை மற்றும் மதம் பற்றிய அறிவு) என்ற தலைப்பில் 613 பக்க அரபு பாட புத்தகத்தையும் துவான் குரு எழுதியுள்ளார்.

இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கான அடிப்படை வழிகாட்டியான இந்தப் புத்தகம், கேப்டவுனில் உள்ள முஸ்லிம்களுக்கு அவர்களின் மத நம்பிக்கையைப் பற்றி கற்பிக்க 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டது.

இன்றும் நல்ல நிலையில் உள்ள இந்தப் புத்தகம், துவான் குருவின் வழித்தோன்றல்களான ரகீப் குடும்பத்தினர் வசம் உள்ளது. கேப் டவுனில் உள்ள தேசிய நூலகத்தில் இந்த புத்தகத்தின் ஒரு பிரதி வைக்கப்பட்டுள்ளது.

“மத நம்பிக்கைகள் தொடர்பாக தான் நினைவில் கொண்டிருந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் துவான் குரு எழுதினார். அத்துடன் தான் எழுதியவற்றை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் ஓர் உரையாகவும் அதைப் பயன்படுத்தினார்,” என்று கூறுகிறார் ஓவைசி.

துவான் குரு தன் கைப்பட எழுதிய குர்ஆனின் ஐந்து பிரதிகளில், மூன்று எங்குள்ளன என்று எளிதாகக் கணக்கிட முடியும். அவ்வல் பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பிரதியைட்ப தவிர, மற்ற இரண்டு பிரதிகள் அவரது கொள்ளுப் பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினரின் வசம் உள்ளது.

துவான் குரு எழுதி, நூலாகத் தொகுக்கப்பட்ட குர்ஆனின் ஆயிரம் பிரதிகள் சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. அவற்றில் ஒன்று, ஜெருசலேமில் உள்ள அல்- அக்ஸா மசூதியின் நூலக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் சில பிரதிகள் அங்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டன. ஜெருசலேமில் உள்ள அல்- அக்ஸா மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாக திகழ்கிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘அல் ஜமா’ என்ற அரசியல் கட்சியின் தலைவரான கனீஃப் ஹென்ட்ரிக்ஸ், மே மாதம் 2019இல், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் துவான் குருவின் குர்ஆன் பிரதியை தனது கைகளில் வைத்திருந்தார்.

துவான் குருவை இந்தோனேசீயாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு அரசியல் கைதியாக விரட்டி அடித்தபோது, அந்தப் பகுதியில் இஸ்லாம் பரவுவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருப்பார் என்று டச்சுக்காரர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் கேப் டவுனின் இன்றைய மக்கள்தொகையாக மதிப்பிடப்பட்டுள்ள 4.6 மில்லியன் பேரில், 5 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.

“துவான் குரு கேப் டவுனுக்கு வந்தபோது, அங்கு இஸ்லாம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிந்தார். அதனால் அவருக்கு அங்கு நிறைய வேலைகள் இருந்தன,” என்று கூறுகிறார் வரலாற்று ஆசிரியர் மார்டன்.

“முஸ்லிம் சமூகம் பிழைத்து, மதிக்கப்படும் சமூகமாக இன்று வளர்ந்துள்ளதற்கு, துவான் குரு எழுதிய குர்ஆனின் முதல் பிரதிதான் காரணம் என்று கூறுவேன்,” என்று பெருமிதம் தெரிவிக்கிறார் துவான் குருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஷஃபிக் மார்டன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.