;
Athirady Tamil News

சென்ஜோன் டிலரி விவகாரங்கள்: பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!

0

நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில், இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கை இன்று (28) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போது பாடசாலைக்க முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சென். ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு கோரி கடிதமொன்றை பெற்றோர்கள் பாடசாலையின் அதிபரிடம் கையளித்தனர்.

அதனை செய்தியாக சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகத்தில், நிகழ்நிலை ( ஒன்லைன்) ஊடாக முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் இரண்டிற்கு உற்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவின் பேரில், எதிர்வரும் 4ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தரம் 05 மாணவர்களுக்கு கடந்த 22ம் திகதி மேலதிக வகுப்பினை நடாத்திக் கொண்டிருந்த வேலை குறித்த ஆசிரியர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

8 வயதான மாணவி சுகயீனம் அடைந்த நிலையில், மாணவியின் பெற்றோர் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் மகளை அனுமதித்தனர்

வைத்தியசாலையில் அனுமதித்த சிறுமியை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் அச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையினூடாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் 06 மாதங்களுக்கு முன்பு இடம்பெற்றதாகவும் 8 வயது மாணவி கடந்த 03 மாதத்திற்கு தரம் 04 வகுப்பிற்கு டிக்கோயா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, அதே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்விற்காக 13 வயதுடைய மாணவன் ஒருவனை இம்மாதம் 21ம் திகதி அழைத்துச் சென்ற வேளை குறித்த மாணவனை காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடந்த 23ம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலிருக்க கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் கல்வி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த ஆசிரியர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்திய பெற்றோர், சகல ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.