;
Athirady Tamil News

போதை ஊசியாகும் புற்றுநோய் வலி நிவாரணி மருந்துகள் – ஈரோடு பெண்கள் சிக்குவது ஏன்?

0

ஈரோட்டில் வழக்கமாகப் பயணிக்கும் சாலைதான் அது. ஆனால் ஏனோ, அன்றைய இரவின் நிசப்தம் திகிலூட்டியது கீதாவுக்கு. மிகவும் துணிச்சலாக ஆட்டோ ஓட்டும் பணி செய்து வந்தாலும் அவரையே சற்று வெடவெடக்கச் செய்தது அவரது கண்ணில் தென்பட்ட சில காட்சிகள். இரவு நேரங்களில் அரைக் கண்கள் சொருகியபடியும், ஆந்தையைப் போல் விழித்தபடியும் பார்க்கும் இளைஞர்கள் ஆங்காங்கே சந்துகளில் நின்று கொண்டிருந்தனர்.

“என்ன்ன்னாக்க்கா? இங்கெல்ல்லலாம் வரக்கூடாது.” எனக் குளறிய வார்த்தைகளும், “போ…..!” என ஆக்ரோஷமாக கத்திய மற்றொரு இளைஞனின் குரலும் கேட்டு நடுங்கிப் போனார் கீதா. சற்று தள்ளி ஆட்டோவை நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அன்றைய தின நினைவுகள் நிழலாடின.

கீதா ஆட்டோ ஓட்டுபவர்தான். ஆனால், இரவுப் பணி செய்பவர் அல்ல. ஈரோட்டில் இரவு வேளையில் தெருத் தெருவாகச் சென்று அவர் தேடி வருவது அன்று காணாமல் போன தன் மகனைத்தான். சிறுவயதில் இருந்து மிகவும் செல்லமாய் வளர்த்த மகன். தாய்க்கு ஒன்று என்றால் துடித்துப் போகும் அன்பு மிக்க அவரைக் காணவில்லை. மாலையில் வழக்கமாக வீட்டுக்குள் வந்ததும் “அம்மா டீ குடு” எனக் கேட்கும் குரல் அன்று அவர் காதில் ஒலிக்கவில்லை.

சற்று நேரத்தில் வந்துவிடுவார் என நம்பிக் காத்திருந்தார் கீதா. பின், ஏதோ பதற்றம் ஏற்பட, அவரது கல்லூரிப் பேராசிரியையிடம் விசாரித்தார். “இங்க போதை ஊசியப் போட்டுக்கிட்டு நெறையா பசங்க சுத்துறாங்க. அவங்க கூடத்தான் உங்க பையனும் சுத்திக்கிட்டு இருந்தான். என்னனு பாருங்க”எனச் சொல்லியிருக்கிறார்.

அன்று மாலை கேட்ட அந்தக் குரல், இரவில், நடுச்சாலையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நின்ற கீதாவின் காதில் அசரீரியாக ஒலிக்க, சற்றும் தாமதிக்காமல், மீண்டும் ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

மீண்டும் இருள். மீண்டும் நிசப்தம். சாலைகளும், சந்துகளும் மாறினாலும் இளைஞர்கள் கூடி நிற்பதும், அவர்கள் தனக்கு ஏதோ தீங்கு விளைவித்துவிடுவார்களோ என்ற அச்சமும் அவருக்கு போகவில்லை. ஆனாலும், அந்தக் கூட்டத்தில் ஒருவேளை தன் மகன் இருக்கிறானோ? என சந்தேகம் எழ அவரைத் தொடர்ந்து தேடச் சொல்லியது தாய் மனம். பெருக்கெடுக்கும் கண்ணீர் கண் பார்வையை மங்கலாக்க, அதனைத் துடைத்தபடியே தேடித் திரிந்தார்.
இரவெல்லாம் காணாமல் போன தன் மகனை தேடி தர சொல்லி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார் ஆட்டோ ஓட்டுநர் கீதா.

விடிந்தே விட்டது. ஆனால் மகன் வரவில்லை. காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கையில்லை. இரவெல்லாம் அலைந்து திரிந்து தேடினாலும் பலனில்லை. ஒருவேளை, தன் மகனும் போதைக்கு அடிமையாகிவிட்டானோ? என்ற அச்சமும், மகனின் எதிர்காலமே பாழாகிவிட்டதோ? என்ற எண்ணமும் அந்த அப்பாவித் தாயை திணறடித்தது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்று தன்னந்தனியாக சாலையில் வரும் வாகனங்களை மறித்து போராடினார். போலீசாரும் அங்கு வந்தனர். “என் மகனைக் காணோம், எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுத்துருங்க” என்ற கெஞ்சலானது, நேரம் செல்லச் செல்ல பெண் போலீசாரைப் பார்த்து “நீங்களும் ஒரு குழந்தைக்கு அம்மா தான? இன்னொரு அம்மாவோட அவஸ்த புரியலியா?” எனக் கேட்குமளவு ஆவேசமாக மாறியது.

என்னதான் போலீசார் அவரை சமாதானம் செய்தாலும் முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தார் கீதா. தன் மகனைக் காணும் வரை அரை உயிரோடுதான் உடல் மட்டும் அலைந்ததாக பிபிசி செய்தியாளரிடம் விளக்கினார். வகுப்பு முடித்துவிட்டு நண்பன் வீட்டுக்கு சென்ற மகன், மறுநாள் திரும்ப வீட்டுக்கு வந்துவிட்டார்.

ஆனாலும் கீதாவின் மனம் ஆறவில்லை. முன்தினம் இரவு பார்த்த காட்சிகளும், பேராசிரியை கூறிய வார்த்தைகளும் அவரை இன்னும் துரத்திக் கொண்டிருந்தது. தனது ஒருநாள் பரிதவிப்பைப் போன்றே எத்தனை எத்தனை தாய்மார்கள் தினம் தினம் அனுபவிப்பார்கள்? என சந்துகளில் நின்ற இளைஞர்களின் பெற்றோரை எண்ணி மனம் வருந்தினார் கீதா.

புற்றுநோய் வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.

தனது கல்லூரி வகுப்பறையில் போதையில் இருந்த மாணவனிடம் தென்பட்ட சில தகவல்களை நமது செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்டார் கீதாவின் மகன். “ ஊசி குத்திய காயங்கள் கைகளில் இருக்கும், அமர்ந்திருக்கும்போதே கண்களை மூடிக் கொள்வார்கள், வகுப்பை கவனிக்க மாட்டார்கள், சாப்பிட மாட்டார்கள்” என்றார்.

அவர்களிடம் போதைப் பொருள் பயன்படுத்திய வாசனை வராது, நடப்பது, வண்டி ஓட்டுவது போன்ற அன்றாடப் பணியை அவர்களால் செய்ய முடியும், ஆனால், போதை மருந்து வாங்க பணம் கிடைக்காவிட்டால் அதீத கோபம் வரும் என்றும் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகி்றார் காவல் டி எஸ் பி பவித்ரா .

ஈரோட்டில் போதை ஊசி என்ற பெயரில் பல இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாவதாக தகவல் வரவே அங்கு என்ன நடக்கிறது என அறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி பவித்ராவை நாடினோம். “16 வயது முதல் 22 வயது வரையுள்ள வளரிளம் பருவத்தினர் சிலரிடம்தான் போதை ஊசிப் பழக்கம் அதிகரித்துள்ளது. புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி தெரியாமல் இருக்க வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரையைத் தண்ணீரில் கலக்கி அதை கைகளில் ஊசி மூலம் நரம்புகளில் செலுத்திக்கொள்கின்றனர்” எனக் கூறி அதிர வைத்தார்.

வலி நிவாரணியைச் சாதாரணமாக சாப்பிடும்போது அது செரிமான மண்டலத்தில் செரித்து, ரத்தத்தில் கலந்து பின் தூக்கம் வரும். ஆனால், அந்த மாத்திரையை நீரில் கலக்கி நரம்புகளில் நேரடியாக செலுத்துவதால் உடனடியாக மூளையைத் தாக்கி போதையை ஏற்படுத்தும். மதுவை விட விரைவில் போதை தருவதாக இதை நம்பி இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர்.

போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் பணம் இல்லாத்தால் போதை பொருள் விற்கும் கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் சிலர் இதை பயன்படுத்துகின்றனர். மீண்டும் அதை வாங்க பணம் இல்லாதபோது, அந்த மாத்திரையை விற்கும் கும்பலிடம் சிக்குகின்றனர். 2 நபர்களை போதையில் சேர்த்துவிட்டால் “போனஸ் புள்ளிகள்“ கிடைக்கும் என்று சொல்லிக் கூட மல்டி லெவல் மார்கெட்டிங் பாணியில் விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதியில் படிப்பை நிறுத்தியவர்களுக்கு எளிதில் இதற்கு அடிமையாகக் கூடிய பிற பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவியரின் தொடர்பு, நட்பு இருப்பதால் இவர்களே எளிதில் போதை ஊசி கும்பலால் விற்பனைப் பிரதிநிதிகளாக இலக்காக்கப்படுகின்றனர்.

சுமார் 300 ரூபாய்க்கு விற்கும் 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை வாங்குகின்றனர். ஒரு மாத்திரையை நீரில் கரைத்தால் அதில் 4 சிறிய சிரஞ்சுகளை நிரப்பி ஊசி போட்டு கொள்கிறார்கள். ஒரு ஊசியை 300 முதல் 1000, 2500, 3000 என அடிமையின் தீவிரத்துக்கும் தவிப்புக்கும் ஏற்ப விலை ஏற்றி விற்கின்றனர். இதனால், அவர்களுக்கு தொடர்ந்து போதைக்காக பணமும் கிடைக்கிறது. இதனை தொழிலாகவே விரிவடையச் செய்கின்றனர்.

“கல்லூரியில் ஆண், பெண் பாகுபாடின்றி சிலரிடம் இந்தக் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவிட் கால ஊரடங்கு இடைவெளியில் படிப்போ, பணியோ இன்றியும், வீட்டிலும் கேட்க ஆளின்றியும் இருக்கும்போது இதுபோன்ற பழக்கம் இளைஞர்களிடம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது” என டிஎஸ்பி பவித்ரா சுட்டிக்காட்டினார்.

ஈரோட்டில் சமீபத்தில், போதை ஊசி விற்றதாக 2 பெண்கள் உட்பட சமீபத்தில் 7 பேரை பிடித்துள்ளனர்.

மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் மருந்து விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த மாத்திரையை போதைக்காக ஊசிக்குள் செலுத்தி விற்பவர்கள் மீது 328 ஐபிசி சட்டப்படி பிறருக்கு போதைப் பொருட்களை வழங்குதல் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி பவித்ரா கூறினார்.

போதை ஊசி விற்றதாக 2 பெண்கள் உட்பட சமீபத்தில் 7 பேரை பிடித்துள்ளனர். எனினும் போதை ஊசி விற்கும் கும்பலில் உள்ள அனைவரையும் இன்னும் பிடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களிடம் திடீரென புதிய பைக், அதிக பணம் இருந்தால் அதை காவல் துறையினர் கவனித்து வருகின்றனர்.

திடீரென “புள்ளிங்கோ“ போன்ற வண்ண வண்ண சிகையலங்காரம், சந்தேகத்துக்கு இடமான வகையில் டாட்டூ, வருமானமே இல்லாமல் திடீரென ஆடம்பரமான பைக் வாங்குவது, பணப்புழக்கம் அதிகரித்திருப்பது, டீக்கடை, பொது இடங்களில் நின்று போதை விற்பனை பற்றி பேசிக் கொள்வது போன்ற விஷயங்களை கவனித்து விசாரித்து, நடவடிக்கை எடுத்து வருவதாக டிஎஸ்பி பவித்ரா தெரிவிக்கிறார்.

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்க அனும்திக்கப்படுவது, போதை பழக்கம் அதிகமாவதற்கு காரணம் என்கிறார் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க பொருளாளர் ரமேஷ்.

ஆன்லைன் மருந்து விற்பனையில்தான் முறையான மருந்துச்சீட்டு இன்றியோ அல்லது மருந்துச் சீட்டை சரி பார்க்காமலோ மருந்துகள் விற்பதாகக் குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க பொருளாளர் ரமேஷ். “இந்த வாய்ப்பு இதுபோன்ற கும்பலுக்கு போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் கிடைப்பதை எளிதாக்கிவிடுகிறது” என அவர் குறிப்பிட்டார்.

“சட்டப்படி ஒரு மருந்துக்கடையில் அசல் மருந்துச்சீட்டைக் கொடுத்து, மருந்து வாங்கி, அதை எந்தெந்த வேளைகளில்? எப்படி சாப்பிட வேண்டும் ? என உரிய மருந்தாளுநர் அறிவுறுத்தி அவரின் மேற்பார்வையின்படியே மருந்துகளை விற்கவேண்டும். ஆனால், பணத்துக்காகவும், மருந்து விற்பனைக்காகவும் சில ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் மருந்துகளை வழங்குவது அரசுக்கே சவாலாக உள்ளது” என ரமேஷ் தெரிவித்தார்.

பல்வேறு முகவரியில் ஆன்லைனில் ஆர்டர் செய்து ஒரே நேரத்தில் அதிக மாஅத்திரைகளை வாங்குகின்றனர்.

பொதுவாக ஒரு நோயாளிக்கு 5 மாத்திரைகளுக்கு மேல் வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. இதனால், ஒரே முகவரியில் வலி நிவாரண மருந்து வாங்கினால் சந்தேகம் வருமோ என பயந்து, 7 முதல் 8 முகவரிகளுக்கு அத்தகைய மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கிக் கொள்கின்றனர். அதை வைத்து மாணவர்களிடம் நீரில் கலக்கி ஊசியாக விற்பனை செய்கிறது இதனை விற்கும் கும்பல்.

மருந்துக்கடைகளில் வாங்குவதற்காக பொய்யாக மருத்துவரின் மருந்து சீட்டை தயாரிக்கின்றனர். வலி நிவாரணி மட்டும் வாங்கினால் சந்தேகம் வரலாம் என்பதால், பிற மருந்துகளையும் உடன் எழுதி வாங்குகின்றனர். மருந்து நிறுவன பிரதிநிதிகளிடம் பணம் கொடுத்து அதிக வலி நிவாரண மாத்திரைகளைக் கொள்முதல் செய்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓபியாட் கலந்த மாத்திரைகளை தொடர்ச்சியாகப் போதைக்கு இளைய சமுதாயத்தினர் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகக் கூறினார் மருத்துவரும் கீழ்பாக்கம் மனநல மையத்தின் பேராசிரியையுமான பூர்ண சந்திரிகா.

ஓபியாட் கலந்த மாத்திரைகளை தொடர்ச்சியாகப் போதைக்கு இளைய சமுதாயத்தினர் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகக் கூறினார் மருத்துவரும் கீழ்பாக்கம் மனநல மையத்தின் பேராசிரியையுமான பூர்ண சந்திரிகா. இன்ஸ்டாகிராமில் விற்பவரை தொடர்பு கொண்டதாகவும், அதை வாங்கிப் பயன்படுத்தி வந்தவர்கள் இதற்கு அடிமையானதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு பெண்ணுக்கு ஒரு இளைஞர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து லைக் கொடுத்து வந்தார். இதையடுத்து DM என்ற குறுஞ்செய்திப் பரிமாற்றம் மூலம் தொர்புகொண்டு நட்பானார். தான் போதை ஊசிக்கு அடிமையாகிவிட்டதாகவும், அதை வாங்கப் பணம் இல்லாமல் அவதிப் படுவதால் தனக்கு உதவுமாறும் கூறியிருக்கிறார்.

வளரிளம் பருவத்தில் உள்ள பெண் என்பதால் அவர் அதனை நம்பி தனது வீட்டின் பீரோவில் இருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்துக் கொடுத்து, அதன் வழியே நட்பாகியதாகவும் குறிப்பிட்டார். தனது இலகிய மனதைப் பயன்படுத்தி பணம் பறித்து ஏமாற்றியது பின்புதான் தெரியவந்ததாக மருத்துவரிடம் மனம் வருந்தியிருக்கிறார் அந்த இளம்பெண்.

குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி ஆன்லைன் மூலம் பணம் கேட்டு பெறுவதாக குற்றச்சாட்டு.

போதைக்கு அடிமையாகுபவர்கள் பணத்துக்காக இதுபோன்று பெண்களை குறிவைப்பது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு விபத்து, உடல்நலமின்மை எனக் கூறி பணம் கேட்டு கெஞ்சுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருவதாகக் கூறினார் மருத்துவர் பூர்ண சந்திரிகா. பணம் இல்லாத பெண்கள் தங்க செயின், டாலர், மோதிரம், கம்மல், பிரேஸ்லெட் என ஏதேனும் ஒன்றை கழற்றிக் கொடுத்துவிட்டு,
“ஒருமுறை ஊசி போட்டுப்பார், தவறில்லை” எனக் கூறி நண்பர்களையும் இந்த பழக்கத்துக்கு அடிமையாக்குகின்றனர்.

இளகிய மனம் உள்ள பெண்கள் எளிதாகக் குறிவைக்கப்பட்டு, போதைக்கு அடிமையாக்கப்படுவதும் அதிகரிக்கிறது. தோல்வியை தாங்க முடியாதவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள், அனைவர் முன்னும் ஆசிரியை திட்டிவிட்டார், பிறர் மத்தியில் உருவக் கேலிக்கு ஆளாகிவிட்டேன், வீட்டில் பெற்றோர் திட்டிவிட்டனர் என பல காரணங்கள் சொல்பவர்களை போதை எளிதில் ஆட்கொள்கிறது. அதில் முக்கியமான காரணம் தனது வயதுள்ள பிற பிள்ளைகள் “இதை முயற்சித்துப்பார்“ எனக் கூறி அழுத்தம் கொடுப்பதுதானாம்.

“ஒருமுறை ஊசி போட்டுப்பார், தவறில்லை” எனக் கூறுவது, படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமானால் ஒரு சில மாத்திரைகளைப் பயன்படுத்து என்பது, கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ள போதையைப் பயன்படுத்துவது போன்ற சமாதானங்களில் இளைஞர்கள் மயங்கிவிடுவதாக பூர்ண சந்திரிகா கூறினார்.

தூக்கம், கவனம் செலுத்துவது, கற்பனைத் திறன் அதிகரிப்பது, அமைதி போன்ற பல காரணங்களைச் சொல்லி பயன்படுத்துவபவர்கள், ஒரு கட்டத்தில் அதனைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அப்படி அதற்கு அடிமையாகும்போதோ, அந்த போதை கிடைக்காதபோதோ பின்வரும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக பயம், கைகளில் ஊசி போட்ட காயங்களில் வலி, திடீரென பிறர் பேசினால் எரிச்சலடைவது, எப்போதும் கடுகடுப்பாக இருப்பது,

கருவிழியின் நடுவில் உள்ள கருப்புப் பகுதி சுருங்குவது, கருவிழியைச் சுற்றியுள்ள வட்டம் பெரிதாவது, பார்வை மங்கலாவது, கண்களில் தண்ணீர் வருவது, தொடர்ந்து கொட்டாவி வருவது, தூக்கம் வராது தவிப்பது, மனநலம் பாதிப்பது ஆகியவை போதைப் பொருட்களின் விளைவுகள்.

அதிக மாத்திரை பயன்படுத்துவதால் சிறுநீரக செயலிழப்பு, மூளை செயல்பாடு குறைவு உள்ளிட்டவை ஏற்படலாம். ஒன்றாக நண்பர்களோடு சேர்ந்து ஒரே ஊசியை பலரும் மாற்றி மாற்றி போடும் போது, எய்ட்ஸ், ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் வரும்.

போதை பழக்கத்திலிருந்து நீங்கள் மீள விரும்பினால், முதலில் மருத்துவரை நேரடியாக அணுக வேண்டும். அல்லது நெருங்கிய நண்பரின் உதவியுடன் மருத்துவரை அணுகலாம். மனக்கட்டுப்பாடு மட்டும் போதையிலிருந்து மீள்வதற்கு போதாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நடத்தும் மாவட்ட மனநலத்திட்டத்தின் மனநல ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரை அணுகலாம். அல்லது உங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மனநலத்துறை அணுகினால் உரிய உதவிகள் கிடைக்கும்.

போதையின் தீவிரத்தை பொருத்து சிலருக்கும் கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனைகள் வழங்கப்படும், சிலருக்கு மருந்துகள் வழங்கப்படும். சிலர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டியிருக்கும்.

போதையின் பிடியிலிருந்து மீண்டு வரும் போது, யோகா, உடற் பயிற்சிகள் மனதை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள உதவும்.

ஒரு வேளை நீங்கள் போதைக்கு அடிமையாகியிருந்தால் 1800-11-0031 அல்லது 1800-11-2356 என்ற எண்களில் அழைத்து போதை மீட்பு பற்றி அறியலாம். இந்த எண்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். அல்லது http://www.nhp.gov.in/quit-tobacco என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.