;
Athirady Tamil News

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: 7 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!!

0

உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. கோசி மற்றும் தன்கர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாலும் மற்ற 5 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்ததாலும் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். பல வாக்குசாவடிகளில் ஓட்டுப்போடுவதற்காக காலை முதலே வாக்காளர்கள் காத்திருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேசம் கோசி தொகுதியில் ஆளும் பாரதியஜனதாவுக்கும், எதிர்கட்சிகள் புதிதாக உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வாக இருந்த தாராசிங் சவுதான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி போட்டியிடுகிறது. இவருக்கு காங்கிரஸ்,கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி போட்டியிடவில்லை.

இதே போல டும்ரி தொகுதியில் பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் நேரடியாக மோதுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ஏ.ஐ.எம். ஐ.எம். கட்சியும் நேரடியாக களத்தை சந்தித்துள்ளது. திரிபுரா போக்சநகர் தொகுதியில் பாரதிய ஜனதாவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மேற்குவங்காளம் தூப்குரி தொகுதியில் பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணி உருவான பிறகு நடைபெறும் 6 மாநிலங்களில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் தேர்தல் முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.