பொலிசாரின் தாக்குதலில் வேலன் சுவாமி வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(21) ஞாயிற்றுக்கிழமை தையிட்டி விகாரைக்கு அருகில்அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக ஈடுபட்டு வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்திருந்தனர்.
வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல்
கைது செய்யப்பட்ட ஐவரையும் நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
இந்நிலையில் , போராட்ட களத்தில் வைத்து , பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி நேற்றைய தினம் பிணையில் வெளி வந்து தனது ஆதீனத்திற்கு திரும்பிய நிலையில் சுகவீனமுற்றுள்ளார்.
அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டமை தொடர்பிலும் , மத தலைவரான வேலன் சுவாமி மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு , அவரை பொலிஸ் வாகனத்தினுள் தூக்கி வீசிய சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருவதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்