;
Athirady Tamil News

பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க வேண்டும்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரிஷி சுனக்!!

0

அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (43) இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இதற்கிடையே, இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமிடையே ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) ஏற்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தற்போது வரை அதிகாரிகள் தரப்பில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து இங்கிலாந்து பிரதமரின் கருத்தாக அந்நாட்டிலிருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் தெரிவிக்கப்படுவதாவது: பொருளாதார வகையில் மட்டுமின்றி அனைத்து ஜனநாயக நாடுகளும் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்வதிலும் மற்றும் அனைத்து வகையிலான இரு தரப்பு உறவிலும், இங்கிலாந்திற்கு இந்தியா ஒரு தவிர்க்க இயலாத முக்கியமான வர்த்தக பங்காளி.

தற்போது நடைபெறும் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது. பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க கூடிய ஒரு ஒப்பந்த முயற்சிக்குத்தான் பிரதமர் ஒப்புதல் அளிக்க விரும்புகிறார். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நீடித்து நிற்கும் ஒரு உறவுமுறையை ஏற்படுத்த தாம் விரும்புவதாக கேபினெட் சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த தகவல்கள் கூறுகின்றன. இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கிற்கு இந்திய வருகையின் போது, சிறப்பான வரவேற்பளிக்க இந்திய அரசு தயாராகி வருகிறது. இந்திய மென்பொருள் துறையின் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான இந்தியாவின் முன்னணி கோடீசுவரர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷரா மூர்த்தி, ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.