;
Athirady Tamil News

பஸ் நிலையத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு டீக்கடையில் தீ விபத்து!!

0

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் டீக்கடை, செருப்பு கடை, இனிப்பு தயார் செய்யும் கடை, சலூன் கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது60) என்பவர் பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார். இன்று காலை வாரசந்தை கூடும் என்பதால், நேற்று பஸ்நிலையத்தில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்த வண்ணமாக இருந்ததால், அப்பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் முருகேசன் டீக்கடையில் திடீரென்று கியாஸ் சிலிண்டர் காலியானதால், வேறு சிலிண்டரை எடுத்து வந்து கியாஸ் அடுப்பில் பொருத்தினார். அப்போது திடீரென்று அதில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனே முருகேசன் மற்றும் கடையில் டீக்குடித்து கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அதற்குள் தீ மளமளவென பற்றி கொண்டதால், அந்த டீக்கடை எரிந்து தீக்கிரையானது. உடனே அங்கிருந்தவர்கள் உடனே போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டீக்கடையில் பற்றி கொண்ட தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டீக்கடைக்காரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் சிலிண்டர்களை வைத்து பயன்படுத்துவதால் இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள் பல முறை குற்றசாட்டியும் இது வரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே, இதுபோன்ற திறந்த வெளியில் டீக்கடை, பலகரா கடை, ஓட்டல் கடை ஆகிய கடைகளில் கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்து கடைக்காரர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டீக்கடை தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.