;
Athirady Tamil News

இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ரஷியாவுக்கே பலன் தரும் – அதிபர் புதின்!!

0

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளில் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்புக்கான ஒரு பெரிய வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இதனை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான இந்த திட்ட தொடக்கம் என்பது, இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம் ஆகும். இந்நிலையில், ரஷியாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டக்கில் 8-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இதில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசியதாவது: புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா மற்றும் இந்தியாவுடன் கடைசியாக அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படும் என நான் பார்க்கவில்லை. எங்களுடைய வடக்கு-தெற்கு திட்டத்துடன் கூடுதலாக, இந்த வழித்தடம் வழியே கூடுதல் சரக்கு போக்குவரத்து இயக்கம் நடைபெறும்.

இதில் எங்களுக்கு தடை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என எதனையும் நான் பார்க்கவில்லை. இந்தத் திட்டம் ரஷியாவுக்கே பலன் தரும். இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் (ஐ.எம்.இ.சி.) திட்டம் ரஷியாவின் தளவாட போக்குவரத்துக்கான வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டம் பல்வேறு ஆண்டுகளாக ஆலோசனையில் இருந்து வந்தது என தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் ஈரான் வழியாக இந்தியாவின் மேற்கு துறைமுகங்களுடன் ரஷியாவை இணைக்கும் வகையிலான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் பற்றி அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.