;
Athirady Tamil News

பிரம்மபுத்திராவில் மெகா அணை – சீனாவின் திட்டத்தை சமாளிக்க இந்தியா என்ன செய்யப் போகிறது?

0

அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் சியாங் நதியின் ஓட்டத்தில் சமீப ஆண்டுகளாக வித்தியாசமான மாற்றங்கள் காணப்படுகின்றன.

சியாங் ஆற்றின் விசித்திரமான நடத்தை காரணமாக சில சமயங்களில் அதில் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கிறது.

இதனால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன. நதி முற்றிலும் வறண்டு கிடப்பதையும் பலமுறை பார்க்க முடிகிறது.

கிழக்கு சியாங் மாவட்டத்தின் மெபோ தாலுகாவில் வசிக்கும் டாக்டர் டாங்கி பர்மா, சிறுவயதிலிருந்தே சியாங் ஆற்றின் இந்தப்போக்கை கவனித்து வருகிறார்.

ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவர் மிகவும் கவலையாக இருக்கிறார்.

“முன்பு சியாங் நதியின் நீர் மிகவும் தெளிவாகவும் நீல நிறமாகவும் இருந்தது. ஆனால் இப்போது சில ஆண்டுகளாக இந்த நதியின் நீர் சேறும் சகதியுமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

“சியாங் ஆற்றின் மேல் நீரோட்டத்தில் (திபெத்திய தன்னாட்சிப் பகுதி) உள்ள நீர்மின் அணையில் ஏதேனும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், சியாங் ஆற்றின் நீரில் கற்களும் மண்ணும் கீழ் நோக்கி வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் முன்மொழியப்பட்ட அணை திட்டத்திற்கான பதில் கடந்த புதன்கிழமையன்று (செப்டம்பர் 6) அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, சியாங் ஆற்றில் தடுப்பணை கட்டும் யோசனையை மத்திய அரசு முன்வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

”திபெத் பகுதியில் உள்ள யார்லுங் சாங்போ ஆற்றில் (சியாங் ஆற்றின் மேல் நீரோட்டம்) மிகப்பெரிய அணை கட்டுவதான சீனாவின் யோசனையை கருத்தில் கொண்டு இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது,”என்று அவர் தெரிவித்தார்.

இமயமலையில் திபெத் பகுதியில் உருவாகும் யார்லுங் சாங்போ ஆறு, உலகின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இது சுமார் 2,880 கி.மீ நீளம் கொண்டது.

இந்த தடுப்பணை கட்டுவதன் மூலம் சியாங் நதியை ‘உயிரோடு’ வைத்திருக்க முடியும் என முதல்வர் காண்டு தெரிவித்தார்.

திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் (TAR) யார்லுங் சாங்போ ஆற்றின் மீது இந்த அறுபதாயிரம் மெகாவாட் அணை கட்டும் திட்டம் பற்றிய தகவல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீன அரசின் ஊடகங்களால் முதலில் பகிரப்பட்டது.

இமயமலையில் திபெத் பகுதியில் உருவாகும் யார்லுங் சாங்போ ஆறு, உலகின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இது சுமார் 2,880 கி.மீ நீளம் கொண்டது.

இந்த நதி சியாங் என்ற பெயருடன் இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசத்தில் நுழைகிறது. பின்னர் அசாமில் பிரம்மபுத்திராவாக மாறி வங்கதேசம் வழியாகச் சென்று கங்கை மற்றும் மேக்னாவுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

அசாமில் நுழையும் முன் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 300 கி.மீ நீளத்திற்கு இந்த நதி பாய்கிறது.

சியாங் பள்ளத்தாக்கில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கை தேசிய பேரிடராக அறிவித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும்

உலகின் மிகப்பெரிய அணையை சீனா உண்மையில் கட்டினால் அதன் தாக்கம் ஆற்றின் கீழ்பகுதி நீரோட்டத்தின் மீது மட்டுமல்லாது வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவும் அசாம் மற்றும் வங்கதேசத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் 14வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் இந்த பெரிய அணை கட்டப்படுவது குறித்து மெபோவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ லோம்போ தாயெங், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது கேள்வி எழுப்பினார்.

சியாங் நதி மீண்டும் மீண்டும் தன் போக்கை மாற்றிக் கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக பல லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பெரிய அளவில் குறைவு ஏற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆற்றின் இந்தப் போக்கு டி’எரிங் வனவிலங்கு சரணாலயத்தின் பரப்பளவையும் குறைத்துள்ளது.

மேல்மட்டத்தில் முறைகேடாக தண்ணீர் திறந்து விடுவது, நீரை தடுப்பது, கட்டுமானப் பொருட்களை ஆற்றில் கொட்டுவது போன்றவற்றில் சீனாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று லோம்போ தாயெங் கூறினார்.

”சியாங் பள்ளத்தாக்கில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கை தேசிய பேரிடராக அறிவித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துப்பேசிய முதல்வர் காண்டு ”சீனாவின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதன் காரணமாக மாறும் சியாங் நதியின் நிலை குறித்து மத்திய அரசும் கவலை தெரிவித்துள்ளது,” என்றார்.

”சியாங் நதியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். சீனா நீரை திசை திருப்பினால், சியாங்கின் பரப்பளவு குறையும். மேலும், அதிக அளவு தண்ணீர் விட்டால், சியாங் பள்ளத்தாக்கு, அசாம் மற்றும் வங்கதேசத்தின் தாழ்வான பகுதிகளில் ’பெரிய அளவிலான வெள்ளப்பெருக்கு’ ஏற்படலாம். அதிகப்படியான நீர் வெளியேற்றத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பெரிய கட்டமைப்புகள் தேவை,” என்று முதல்வர் குறிப்பிட்டார்.

மின்சார உற்பத்திக்காக அணையிலிருந்து பயன்படுத்தப்படும் நீர் அளவு பற்றிய தகவல்களைப் பெற வேண்டும்

இருப்பினும், சீனாவால் முன்மொழியப்பட்ட 60 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இந்த அணை பற்றிய முழுமையான மற்றும் தெளிவான தகவல்கள் கிடைக்காத வரை, எந்த வகையான தடுப்பணை பற்றியும் விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் மெகா அணை மற்றும் இந்திய அரசின் யோசனை கூறப்பட்ட பரந்த தடுப்பணைகள் குறித்து ஆறுகள் மற்றும் மக்கள் குறித்த தெற்காசியா நெட்வொர்க்கின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், நீர் நிபுணருமான ஹிமான்ஷு டக்கர் பிபிசியிடம் பேசினார்.

”இது ஒரு திட்டம் மட்டுமே என்று நான் கருதுகிறேன். இந்த அளவிற்கு பெரிய அணை கட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. ஏனெனில் இது உலகின் மிகவும் ஆபத்தான திட்டம்.

இரண்டாவதாக, இது உலகின் மிக அதிக செலவு பிடிக்கும் மற்றும் சவாலான திட்டமாகும். இதைத் தவிர, தற்போது இந்த அணை பற்றி யாரிடமும் தெளிவான தகவல் இல்லை,” என்று அவர் கூறினார்.

“சியாங் ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு முன், சீன அணையின் அளவு எவ்வளவு இருக்கும்? அதன் உயரம் என்ன? அணையின் சேமிப்புத் திறன் என்ன? என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

மின்சார உற்பத்திக்காக அணையிலிருந்து பயன்படுத்தப்படும் நீர் அளவு பற்றிய தகவல்களைப் பெற வேண்டும். அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படும்? இந்த எல்லா தகவல்களும் இல்லாமல் தடுப்பணை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்வது கடினம்,” என்கிறார் டக்கர்.

அருணாச்சல பிரதேசத்தில் ஆற்றில் அணை கட்டுவது தொடர்பாக பல ஆண்டுகளாக எதிர்ப்பு இருந்து வருகிறது.

தடுப்பணைக்கு உண்மையான வரையறை எதுவும் இல்லை என்று நீர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பணைக்கும் அணைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. தண்ணீரை திருப்பி விட தடுப்பணை கட்டப்படுகிறது. அதில் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை.

“இந்த தடுப்பணை 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணை போல் இருக்கும். எனவே, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் இந்த திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் வெளிவரும் வரை சரியான மதிப்பீடு செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

தற்போது ​​திபெத்திய தன்னாட்சிப் பகுதியில் சீனாவிடம் ஆறு அணைகளும், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவிடம் மூன்று அணைகளும் உள்ளன. அவற்றில் இரண்டு திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

இந்த சிறிய ஆற்று அணைகள் அனைத்தும் ‘ரன் ஆஃப் தி ரிவர்’ நீர் மின்சார திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. அதாவது நீர் பாய்ச்சலுக்கு இடையூறில்லாமல் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைகள் இவை.

ஆனால் அருணாச்சல பிரதேசத்தில் ஆற்றில் அணை கட்டுவது தொடர்பாக பல ஆண்டுகளாக எதிர்ப்பு இருந்து வருகிறது.

2007 ஆம் ஆண்டு முதல் அருணாச்சல பிரதேச அரசு, சுமார் 140 பெரிய அணைகளுக்கு பொது மற்றும் தனியார் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதில் 66 திட்டங்கள் பின்னர் ரத்து செய்யப்பட்டன.

சியாங் பகுதிக்கு நேரில் சென்று, உத்தேசிக்கப்பட்ட தடுப்பணைக்கான ஆய்வு மற்றும் விசாரணைப் பணிகளை அனுமதிக்குமாறும், ஒத்துழைப்பு வழங்குமாறும் தான் மக்களிடம் கேட்டுகொள்ள இருப்பதாக முதல்வர் காண்டு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேசத்தை நாட்டின் மின்சார மையமாக மாற்ற, 58 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்

“சியாங் ஆற்றில் முன்மொழியப்பட்ட தடுப்பணை பற்றி விரிவான தகவல்கள் இல்லை. ஆனால் சீனாவின் எந்த நடவடிக்கைக்கும் நமது அரசு தகுந்த பதிலை அளிக்கிறது,” என்று அருணாச்சலப் பிரதேசத்தின் மூத்த பாஜக தலைவரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டொமினிக் ததார் கூறினார்.

“இந்த முன்மொழியப்பட்ட தடுப்பணையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளதா என்பதை இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. அணை மற்றும் தடுப்பணைக்கு உள்ளூர் மக்களின் எதிர்ப்பைப் பொருத்த வரையில், சீனா காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து மக்களுக்கு முறையாக விளக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“அருணாச்சல பிரதேசத்தை நாட்டின் மின்சார மையமாக மாற்ற, 58 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எங்கள் கனவை நனவாக்கும் பொருட்டு அது குறித்து உள்ளூர் மக்களுக்கு விளக்கப்படுகிறது. பலர் எங்கள் கருத்தை புரிந்துகொள்ளவும் செய்கின்றனர்,” என்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே எல்லை மோதல் இருந்து வருகிறது.

2020 ஆம் ஆண்டில் லடாக்கின் கல்வானில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான உறவுகள் சீர்குலைந்தன.

ஆனால், சில காலமாக சீனாவின் எந்த நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கும் உத்தியை இந்தியா கடைப்பிடித்து வருகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே எல்லை மோதல் இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே 3,488 கிலோமீட்டர் நீள எல்லை உள்ளது.

1914 ஆம் ஆண்டில், திபெத், சீனா மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் பிரதிநிதிகள் சிம்லாவில் சந்தித்தனர், அப்போது எல்லைக்கோடு பற்றி தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இதை சீனா ஏற்கவில்லை. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சுயாதீன ஆய்வாளரான டாக்டர் ரூபக் பட்டாச்சார்ஜி, அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் சீனாவின் அச்சுறுத்தல் அப்படியே உள்ளது என்கிறார் அவர்.

“உயரத்தில் இருக்கும் நாடாக இருப்பதால் அணை கட்டும் விஷயத்தில் சீனா தன்னிச்சையாக செயல்படுகிறது. சீனாவை எதிர்கொண்டு சமாளிக்க அருணாச்சல பிரதேசத்தில் தொழில்நுட்பம் மற்றும் வளங்களின் அடிப்படையில் இந்தியா வலுவான அடித்தளத்தை உருவாக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு முதல் ராணுவ உத்தி உட்பட எல்லா திசையிலும் பணிகளை மேற்கொள்ளவேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.