;
Athirady Tamil News

இலங்கையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: பக்கச்சார்பற்ற விசாரணை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

0

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிரான எந்தவிதமான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் அவமதிப்புகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன மற்றும் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு
குறித்த கடிதத்தில், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிரான எந்தவிதமான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் அவமதிப்புகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, நீதித்துறையின் சுயாதீனத்தை சேதப்படுத்தும் இவ்வாறான சம்பவங்கள் காரணமாக, சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி தமது கடமைகளை ஆற்றக்கூடிய சூழல் இருக்க வேண்டும் என சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல், நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய கேள்விகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்பதை வலியுறுத்திய சட்டத்தரணிகள் சங்கம், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.