;
Athirady Tamil News

யாழில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி

0

யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் ‍நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ‘யாழ் கானம்’ இசை நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது.

இதில் முதல் அம்சமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌன அஞ்சலி
“இந் நிலையில் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலையும் கலாசாரமும் சிறந்து ஓங்கும் இந்த யாழ் மண்ணில் ‘யாழ் கானம்’ என்ற இசை நிகழ்ச்சியை அளிப்பதில் சந்தோஷ் நாராயணனும் அவர் குழுவினரும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர்.

இம்மண்ணும் இம்மண்ணில் வாழும் மக்களும் கண்ட துயர்கள் அநேகம். ஒரு வருடத்தின் 365 நாட்களில் எந்த திகதியையும் எடுத்து வரலாற்று ஏடுகளைப் பின்னோக்கி புரட்டினாலும் அந்த திகதியில் ஒரு கொடூர சம்பவம், ஒரு துயர்மிகு சம்பவம் நிகழ்ந்திருக்கும்.

ஏன், இன்றும் இத்திகதியில் சரியாக 36 வருடங்களுக்கு முன் யாழ். போதனா வைத்தியசாலையில் நடந்த கொடூரமான நிகழ்வை நாம் துயருடன் நினைவுகூர்ந்துகொண்டிருக்கிறோம்.

கலை நிகழ்ச்சிகள் உள்ளத் துயர்களை நீக்கும் மருந்தாவன. அதனால் சந்தோஷ் நாராயணனும் அவரது குழுவும் இவ்விசை விருந்தை ஒரு இசை மருந்தாகவே மக்களுக்கு வழங்குகின்றனர்.

ஆதலால் பல தசாப்தங்களாக நடந்த கொடிய யுத்தத்தில் மறைந்த எம் நாட்டு மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு இம்மருந்தை அருந்துவதே பொருத்தமானதாய் இருக்கும்.

இயலுமானவர்கள் எல்லோரும் எழுந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறோம்” என தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களுக்காக அனைவரும் எழுந்து நின்று, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.