;
Athirady Tamil News

சீதா தேவியின் பிறந்தவீட்டிலிருந்து அயோத்திக்கு பரிசுபொருள்கள்

0

அயோத்தி ராமஜென்ம பூமியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வருகிற ஜன. 22-ஆம் திகதி ராமரின் குழந்தை வடிவ விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இதையொட்டி, சீதா தேவியின் பிறந்தவீட்டிலிருந்து அயோத்திக்கு பரிசுபொருள்கள் வரவிருக்கின்றன.

1,100 கூடைகளுடன் ராமருக்கு திருமணப் பரிசு
ஜனவரி 22 அன்று ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை நடைபெறவிருப்பதால், அவருடைய மணமகள் சீதாவின் பிறந்த இடமான நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து 500 பேர் கொண்ட ஊர்வலம், 1,100 கூடைகளுடன் ராமருக்கு திருமணப் பரிசுகளுடன் புறப்பட்டவிருக்கிறது.

ஜனவரி 4 ஆம் தேதி ஜனக்பூரில் உள்ள ஜானகிதேவி கோயிலிலிருந்து தொடங்கும் இந்த ஊர்வலம் இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜனவரி 6 ஆம் தேதி அயோத்தியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கூடைகளில் நகைகள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், உலர் பழங்கள், பாத்திரங்கள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் உட்பட ஏராளமான திருமண பரிசுகள் இருக்கும்.

மற்றும் பல கிலோ எடையில் அரிசி போன்ற உணவு தானியங்களும் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பாரம்பரியமாக மணமகள் திருமணமாகி மணமகனுடன் வீட்டுக்குச் செல்லும்போது பரிசாக வழங்கப்படுவது வழக்கமாம்.

ஜனக்பூருக்கும் அயோத்திக்கும் இடையிலான தூரம் 458 கி.மீ. நேபாளத்திலிருந்து வரும் குழுவின் தலைவர் கூறுகையில்,

“நாங்கள் ஜானகிதேவி கோயிலிலிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்குவோம், பின்னர், ஜலேஷ்வர் வழியாக, பிர்கஞ்ச் சென்றடைவோம், அங்கு நாங்கள் இரவு ஓய்வெடுப்போம்.

சுமார் 30 கார்கள் மற்றும் ஐந்து பேருந்துகள் இந்த பரிசுகளை எடுத்துச் செல்லும் ஊர்வலத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

ஜனவரி 5 ஆம் தேதி, நாங்கள் ரக்சால் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து பெடியாவில் மதிய உணவு சாப்பிடுவோம். பின்னர் கோரக்பூர் மற்றும் பஸ்திபூர் வழியாக அயோத்தியை அடைவோம்,’’ என்று கூறினார்.

அதோடு ஜனவரி 6 ஆம் தேதி காலை 8 மணிக்கு 1,100 கூடைகளும் ராமர் கோயில் அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.