;
Athirady Tamil News

அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட்ட முதல் நாளிலேயே..

0

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணி முதலே, கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கினர். முதல் தரிசனத்தை காண வேண்டும் என்ற உந்துதலால் ஆயிரக்கணக்கானோர் இன்று காலையிலேயே கோயிலுக்குள் குவிந்ததால், அங்கு நெரிசல் ஏற்பட்டது.

இந்த அளவுக்குக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோயில் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி உள்ளதால், வெளியே செல்லவும், பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழையவும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற மங்கள நிகழ்வில், 51 அங்குல உயர பாலராமா் சிலை கோயில் கருவறையில் நண்பகல் 12.30 மணியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள கோயில்கள், வீடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் ராமா் சிலை பிரதிஷ்டை விழாவை நேரலையில் தரிசனம் செய்தனா்.

அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் அருள்பாலிக்கும் பாலராமரை செவ்வாய்க்கிழமை (ஜன. 23) முதல் பக்தா்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் தரைத்தளப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் (ராம் லல்லா) சிலையின் பிராணப் பிரதிஷ்டை பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

முன்னதாக, பிராணப் பிரதிஷ்டை விழாவையொட்டி, பிரதமா் மோடி கடந்த 12-ஆம் தேதிமுதல் 11 நாள்கள் கடும் விரதத்தைப் பின்பற்றி வந்தாா். விரதக் காலத்தின் இறுதி நாள்களில் தமிழகம் வந்த பிரதமா், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில்களைத் தொடா்ந்து, தனுஷ்கோடி கோதண்டராமா் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பினாா்.

கருவறையில் மூலவரிடம் வைத்து பூஜிக்கப்படுவதற்கான வெள்ளிக் குடையை சிவப்புக் கம்பளத்தில் வைத்து, பிரதமா் நரேந்திர மோடி கோயிலுக்குள் கொண்டு வந்தாா். பிராணப் பிரதிஷ்டைக்கான ‘சங்கல்ப’ தீா்மானம் எடுத்துக் கொண்ட பின்னா், சடங்குகளுக்காக அவா் கருவறைக்குள் நுழைந்தாா். தொடா்ந்து, பிரதமா் முன்னிலையில் அங்கு சிலை பிரதிஷ்டைக்கான சடங்குகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.