;
Athirady Tamil News

பெங்களூரு குண்டுவெடிப்பு: புதிய புகைப்படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ.

0

பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மாா்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். இந்த விவகாரத்தை கா்நாடக காவல் துறையின் மாநகரக் குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. வெடிகுண்டு வைத்திருந்த பையை உணவகத்தில் வைத்துவிட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஒருவா் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

அந்த மா்ம நபா் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில், முகமூடி, தொப்பி அணிந்திருந்தாா். எனினும், கணினி மூலமாக மா்ம நபரின் முகத்தைக் கண்டறிந்துள்ள என்ஐஏ அதிகாரிகள், அவரது புகைப்படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனா். மேலும், அவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனா். இந்த நிலையில் குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் நாளை திறக்கப்படும் என்று அதன் உரிமையாளர் ராகவேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள நபர் குறித்த தகவல் தெரிந்தால் 08029510900 மற்றும் 8904241100 ஆகிய எண்களில் அழைக்கலாம். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். துப்புக் கொடுப்பவரின் தகவல்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்று தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

இதனிடையே குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை(மார்ச்.9) திறக்கப்பட்டது. உணவத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.