;
Athirady Tamil News

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

0

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரந்துடுவ, கிரிந்த, புத்தளம், மாதம்பே மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மொரந்துடுவ – களுத்துறை – பண்டாரகம வீதியில் தெல்கடை பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி
இதேவேளை, திஸ்ஸமஹாராமய கிரிந்த வீதியில் விலமுல்ல சந்திக்கு அருகாமையில் கிளை வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், பிரதான வீதியில் திடீரென பிரவேசித்து சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதிக்கு அருகில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதி உயிரிழந்ததுடன் இன்னுமொருவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புத்தளம் குருநாகல் வீதியில் கல்குளம் பிரதேசத்தில் குருநாகலிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் லொறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணும் மற்றும் பின்னால் பயணித்த பெண்ணும் சிறு குழந்தையும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
லியகொடை புத்தளம் வீதியில் 63ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் சிலாபத்திலிருந்து மாராவில் திசை நோக்கிச் சென்ற கார் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், அதுருகிரிய பனாகொட எம்புல்கம வீதியில் பனாகொடை சந்திக்கு அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துநரால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த சாரதி ஹோமாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.