என் மனம் தவம்செய்து காத்திருக்கிறது: எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாடு குறித்து வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல் மாநில மாநாடு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் திகதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி வி சாலையில் இம்மாநாட்டினை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், த.வெ.க தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் அறிக்கை
அவர் தனது அறிக்கையில், “அரசியலை வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையன்று.
நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. உற்சாகமும், உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில், “நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) October 20, 2024