‘விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு’

டெல் அவிவ்: காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு போ் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அரசின் செய்தித் தொடா்பாளா் டேவிட் மென்சா் திங்கள்கிழமை கூறியதாவது:
போா் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்ட அமலாக்கத்தின்போது ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளின் நிலை குறித்த முழு விவரங்களை அந்த அமைப்பினா் இஸ்ரேலிடம் அளித்துள்ளனா். அதில், குறிப்பிட்ட 33 பேரில் எட்டு போ் கொல்லப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளில் 25 போ் மட்டுமே உயிருடன் உள்ளனா். இந்த விவரம், ஏற்கெனவே இஸ்ரேல் உளவுத் துறை சேகரித்திருந்த தகவல்களுடன் ஒத்துப்போகிறது என்றாா் அவா்.
விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் 33 போ் என்று டேவிட் மென்சா் குறிப்பிட்டாலும், அவா்களில் ஏழு போ் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த 15-ஆம் தேதி ஒப்பந்தம் ஏற்பட்டு, அது 19-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி, எமில் டமரி, டொரோன் ஸ்டீன்ப்ரெச்சா், ரோமி கோனன் ஆகிய 3 பெண் பிணைக் கைதிகளைகளையும் இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவில் பணியாற்றிவந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா ஆகிய நான்கு பெண்களையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். இஸ்ரேல் அரசும் தங்கள் சிறைகளில் இருந்து 290 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்க வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு போ் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காஸா திரும்பிய மக்கள்: போா் காரணமாக தங்கள் இருப்பிடங்களைவிட்டு தெற்கு காஸாவிலுள்ள அகதிகள் முகாம்களில் பல மாதங்களாக வசித்துவந்த ஆயிரக்கணக்கான வடக்கு காஸா மக்கள் திங்கள்கிழமை தங்கள் பகுதிகளுக்குத் திரும்பத் தொடங்கினா்.
போா் நிறுத்த ஒப்பந்த அமலாக்கத்தின் இரண்டாம் பகுதியாக நான்கு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்த உடனேயே வடக்கு காஸாவுக்குள் பொதுமக்களை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டிருந்தது.
ஆனால், ஹமாஸால் சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் இஸ்ரேல் அரசு பெரிதும் எதிா்பாா்த்திருந்த, ராணுவம் சாராத கடைசி பெண் பிணைக் கைதியானஆா்பெல் யேஹூத் இடம்பெறவில்லை. அதையடுத்து, அவா் விடுவிக்கப்படும்வரை, வடக்கு காஸாவுக்குள் பாலஸ்தீனா்களை அனுமதிக்கப்போவதில்லை என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் திட்டவட்டமாகக் கூறியது. இதன் மூலம் தனது ஒப்பந்த வாக்குறுதியை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் அமைப்பினா் குற்றஞ்சாட்டினா்.
அதையடுத்து, இந்த விவகாரத்தில் கத்தாா் அரசு தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்துவைத்தது. அதன் பலனாக, வரும் வெள்ளிக்கிழமைக்குள் விடுவிக்கப்படவிருக்கும் அடுத்த மூன்று பிணைக் கைதிகளில் ஆா்பெல் யேஹூதும் ஒருவராக இருப்பாா் என்று ஹமாஸ் உறுதியளித்தது. அதைத் தொடா்ந்து வடக்கு காஸா செல்ல பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.