;
Athirady Tamil News

அநுர தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது – ஆளுநர் தெரிவிப்பு!

0

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், நியூஸிலாந்துத் தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பாகவும் அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக ஆளுநர் விளக்கமளித்தார்.

அத்துடன் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றமையும் எதிர்காலத்தில் பொருட்கள் கப்பல் சேவை நடைபெறவுள்ளமையையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர் தமிழர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி வடக்கு மாகாணத்துக்கு வருவதற்காக போக்குவரத்துக்கு பெருமளவு நேரத்தை விரயமாக்கின்றனர் எனக் குறிப்பிட்ட ஆளுநர், கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரையிலாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துவது தொடர்பிலும், நியூஸிலாந்துத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பில் நியூஸிலாந்துத் தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

விளிம்புநிலையில் உள்ள மக்கள் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இன்னமும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன எனவும், ஒரு வேளை உணவுடன் அவர்கள் தமது அன்றாட உணவு உட்கொள்ளலை நிறுத்திக்கொள்கின்றனர் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
இருப்பினும் தற்போதைய நடைமுறைகளின் கீழ் சரியான பயனாளிகளை இனம் காண்பதில் கள அலுவலர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர், நடைமுறைகளை மாற்றியமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கத்தால் பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றபோதும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் அவை போதுமானதாக இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கின்றது என ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

போருக்கு முன்னர் இங்கு பல தொழிற்சாலைகள் இயங்கியமையும், அதன் ஊடாகப் பலருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்ததையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவை தற்போது இயங்காமையால் இங்குள்ள இளையோர் வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்படுவதையும் ஆளுநர் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.

வடக்கில் அதிகரித்துள்ள உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை மற்றும் அதனது தாக்கங்கள் தொடர்பிலும் நியூஸிலாந்துத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

இளையோருக்கான பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வடக்கு மாகாணத்தில் சமய நல்லிணக்கம் தொடர்பிலும் தூதுவர் ஆளுநரிடம் வினவினார். இதேவேளை, வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம், மீள்குடியேற்றம், உள்கட்டுமான அபிவிருத்தி தொடர்பிலும் ஆளுநர், தூதுக் குழுவினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.