மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் 11 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்

புதுடெல்லி: தற்போதைய 18-வது மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருந்து 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதைய 18-வது மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 74 பேர் பெண்கள். இவர்களில் மேற்கு வங்கத்தில் இருந்து அதிகபட்சமாக 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஆண் எம்.பி.க்கள் 469 பேரில் உ.பி.யில் இருந்து அதிகபட்சமாக 73 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தலில் பெண்களின் பங்கேற்பை பொருத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து அதிகபட்சமாக 111 பெண்கள் போட்டியிட்டனர். இதையடுத்து உ.பி.யில் இருந்து 80 பேரும் தமிழ்நாட்டில் இருந்து 77 பேரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 152 தொகுதிகளில் பெண் வேட்பாளர் ஒருவர் கூட போட்டியிடவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் ஆண்கள் 65.55% பேரும் பெண்கள் 65.78% பேரும் வாக்கு செலுத்தினர். செலுத்தியவர்களில் ஆண்களை விட பெண்கள் 0.23 சதவீதம் அதிகம்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.