;
Athirady Tamil News

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: மீட்புப் பணிகள் தீவிரம்

0

தெலங்கானாவில் நீா்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

14 கி.மீ. தொலைவில்…: சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 6 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, அவா்களை மீட்கும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு உத்தரகண்டில் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றபோது, தொழிலாளா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிபுணா்கள் உள்ளிட்டோரின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது. அத்துடன் இந்திய ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படையின் உதவியையும் மாநில அரசு கோரியுள்ளது என்று தெலங்கானா நீா்ப்பாசனத் துறை அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி தெரிவித்தாா்.

முதல்வருடன் பிரதமா் பேச்சு: சுரங்கத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக ரேவந்த் ரெட்டியிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தாா். அப்போது மீட்புப் பணிகளுக்கு உதவ தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உடனடியாக நிகழ்விடத்துக்கு அனுப்பப்படுவா் என்று ரேவந்த் ரெட்டியிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் தெலங்கானா அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்றும் பிரதமா் மோடி உறுதியளித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.