தேசிய கட்சிகளுக்கு போடும் வாக்கு நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது: சுயேட்சை முதன்மை வேட்பாளர் சி.பிறேமதாஸ்

தேசிய கட்சிகளுக்கு போடும் வாக்கு நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது என வவுனியா மாநகர சபையில் பசு சின்னத்தில் சுயேட்சைக் குழு -02 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் ஆதிக்கம் நிறைந்த அதிகார சபைகளே எங்கும் காணப்படுகின்றது. சிங்கள தேசிய கட்சிகளாலும், தமிழ் தேசிய கட்சிகளாலும் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, தலைமையிழந்து கேட்போர் அற்ற நிலையில் நிர்க்கதியாகி துரோகிகளுடன் இருப்பதை விட எதிரியுடன் சேர்ந்து உரிமை இழந்தாலும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என மனவிரக்தி ஏற்பட்டு இன்றைய அரசாங்கத்தை ஆதரித்து வடக்கில் 5 ஆசனங்களை கொடுத்துள்ளோம்.
159 பாராளுமன்ற உறுப்பினர்கள். சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. என்ன செய்ய முடியாது. அதுபோதாது என்று உள்ளுராட்சி சபை அதிகாரங்களையும் தேசிய மக்கள் சக்திக்கு தாருங்கள். அப்போது தான் நிதி ஒதுக்குவோம் என்கிறார் ஜனாதிபதி. அதிகாரம் தந்தால் மட்டுமே நிதி எனக் கூறுவது ஊழலுக்கு ஒப்பான கருத்து இல்லையா.
எமது மக்களின் வரிப்பணம்,தண்டப்பணம் என்பனவே திறைசேரியில் இருந்து பிரித்து அனுப்பப்படுகின்றது. இது எந்த அரசாங்கம் வந்தாலும் செய்ய வேண்டிய கட்டாயம். தேசிய கட்சிகளுக்கு அளிக்கும் வாக்கானது சிறுபான்மையினரின் விகிதாசாரத்தை கேள்விக்குறியாக்கும். நீங்கள் சிந்தியுங்கள்.
எமது எல்லை நகரமான வவுனியா நகரசபை மாநகர சபையாக மாறும் போது எல்லைகள் விஸ்தரிக்கப்படும். இன விகிதாசாரம் மாறும். அதன் முன்னேற்பாடாகவே இந்த அரசு வடக்கை குறிவைத்து பிரச்சாரம் செய்கிறது. பாராளுமன்ற தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவு செய்யவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்றார்கள். இப்போ அப்படியான கைதிகள் இல்லை என்கிறார்கள். நாம் தமிழர்கள் என்பதால் எமது அரசியல் கைதிகள் விடுவிக்கபடவில்லை.
சுனாமி கட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது வடக்கிற்கு உதவக் கூடாது என போராட்டம் செய்த தோழர்களின் அரசு. அப்படியான மனிதாபிமானம் இல்லாதவர்கள் எப்படி நமக்கான தீர்வை தருவார்கள். இருந்தும் நம்பினோம். வாக்களித்தோம். அதுவும் போதாது என்று மக்களுக்காகவுள்ள உள்ளுராட்சி சபைகளின் கடைசி அதிகாரத்தையும் தாருங்கள் என்று கேட்டு நிற்கிறார்கள்.
எமது கிராம அபிவிருத்திக்கான தேர்தல். தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமையின்மையே இதற்கு எல்லாம் காரணம். அவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், விரக்தியும், நிர்கதியாக நின்ற போது சந்தர்ப்பம் பார்த்து உள்ளே நுழைந்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகிறார்கள். விழிபடையுங்கள். தேசிய கட்சிகளுக்கு போடும் வாக்கு நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது.
உங்கள் கிராமத்தில் உள்ள தற்துணிவுள்ள, சிறந்த சமூக சேவை செய்கின்ற, ஒழுக்கமுள்ள, கருணை உள்ளம் கொண்ட ஒருவரை தெரிவு செய்யுங்கள். இது உங்ளுக்கான தேர்தல். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சுயமாக சிந்தித்து வாக்களியுங்கள்.
நாம் பல்வேறு புதிய திட்டங்களுடன் மக்களுக்கான சேவையை கொண்டு இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளோம். எமக்கு கிடைக்கும் கொடுப்பனவை, எமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கே கொடுப்போம். எனவே மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள் எனத் தெரிவித்தார்.