பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி

இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர் சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும்.
ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை.
சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.
அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.
அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டமானது நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் அருகே ஆரம்பிக்கப்பட்டு யாழ் நகர் ஊடாக பிரவேசித்து நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நிறைவு பெறவுள்ளது.
இதில் மாணவர்கள் பொதுநல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும் – என்றனர்.