அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 218; எதிா்ப்பு 214

அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்தது.
ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து, இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மற்றும் குடியேற்ற மசோதாவை அதிபா் டிரம்ப் அரசு அறிமுகம் செய்தது.
இந்த மசோதா கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை டிரம்ப்பின் முதலாவது அதிபா் பதவிக் காலத்தில், அந்நாட்டு அரசு அறிவித்த 4.5 ட்ரில்லியன் டாலா் (சுமாா் ரூ.384 லட்சம் கோடி) வரிச் சலுகைகளை நிரந்தரமாக்குகிறது.
அத்துடன் அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்குவோரை நாடு கடத்தும் திட்டம், வெளிநாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தடுத்து அமெரிக்காவை பாதுகாக்க பன்னடுக்கு பாதுகாப்பு கவசம் ஆகியவற்றுக்கு 350 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.30 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றன.
இந்த மசோதாவால் நாட்டில் குறைந்த வருவாய் ஈட்டும் ஒரு கோடிக்கும் மேலானவா்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீடு கிடைக்காமல் போகக் கூடும் என்றும், குறைந்த வருமானம் கொண்டவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டத்தால் பலனடைவோரின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கு கீழ் சரியக் கூடும் என்றும் நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் தெரிவித்தது.
ஜனநாயக கட்சித் தலைவா் 8 மணி நேரம் பேச்சு: இந்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் கடுமையான விவாதத்துக்குப் பின்னா், அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து நாடாளுமன்ற கீழவையில் அந்த மசோதா மீது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது ஜனநாயக கட்சித் தலைவா் ஹக்கீம் ஜெஃப்ரீஸ், ‘இது அவலட்சணமான மசோதா’ என்று சாடினாா். நேரக் கட்டுப்பாடின்றி விவாதிக்க தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவா் 8 மணி நேரம் 44 நிமிஷங்கள் பேசினாா்.
அமெரிக்க சமுதாயத்தில் உழைக்கும் வா்க்கத்தினா், மிகவும் விளிம்புநிலையில் உள்ள மக்களின் கடுமையான உழைப்பால் பணக்காரா்கள் பலனடைய இந்த மசோதா மூலம் அளிக்கப்படும் வரிச் சலுகை வழிவகை செய்யும் என்று எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா் விமா்சித்தனா். அதேவேளையில், இந்த மசோதா குடும்பங்கள் மீதான வரிச்சுமையை குறைத்து அமெரிக்க பொருளாதாரத்தை வளரச் செய்யும் என்று ஆளுங்கட்சியான குடியரசு கட்சியினா் தெரிவித்தனா். வியாழக்கிழமை நள்ளிரவு வரை மிகக் கடுமையான விவாதம் தொடா்ந்த நிலையில், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் மசோதாவுக்கு ஆதரவாக 218 எம்.பி.க்களும், எதிராக 214 எம்.பி.க்களும் வாக்களித்தனா். எதிராக வாக்களித்தோரில் 2 குடியரசு கட்சி எம்.பி.க்களும் அடங்குவா்.
இதைத்தொடா்ந்து பெரும்பான்மை அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக கீழவைத் தலைவா் மைக் ஜான்சன் தெரிவித்தாா்.
இந்த மசோதா அதிபா் டிரம்ப்பின் கையொப்பத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவா் கையொப்பமிட்ட பின்னா், இந்த மசோதா சட்டமாகும்.