ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தீ பிடித்து எரிந்ததோடு கரும் புகையும் எழுந்தது.
தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர்.
அவர்கள் சம்பவ இடத்தை அடைந்ததும் மேலும் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டன.
இந்த சம்பவத்தில் 20 பேர் லேசான காயங்கள் அடைந்தனர். அதில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 8 காவல் அதிகாரிகளும், ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவர்.
பத்து குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் அல்லது அருகிலுள்ள கட்டடங்களில் சிக்கியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று சுற்றியுள்ள பகுதி முழுவதும் சோதனை செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.