;
Athirady Tamil News

முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கப்பட்ட வங்கதேச பணத்தாள் வெளியானது!

0

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் நீக்கப்பட்ட புதிய பணத் தாள்கள் வெளியாகியுள்ளது.

அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந்து மற்றும் புத்த கோயில்கள், இயற்கை நிலப்பரப்பு மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன.

வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும் ஷேக் முஜிபுரின் மகளுமான ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

கடந்தாண்டு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் புதிதாக அச்சடிக்கப்படும் 20, 100, 500, 1000 தாள்களில் ஷேக் முஜிபுர் படத்துக்கு பதிலாக மதம் தொடர்புடைய கட்டமைப்புகள், பாரம்பரிய சின்னங்களை மாற்ற மத்திய வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வங்கதேச மத்திய வங்கி புதிய பணத் தாள்களை வெளியிட்டுள்ளது.

ஹிந்து மற்றும் புத்த கோயில்கள், வரலாற்று அரண்மனைகள், பிரிட்டிஷ் ஆட்சியில் வங்கதேச பஞ்சத்தை சித்தரிக்கும் ஓவியர் ஜைனுல் அபேதினின் ஓவியங்கள், பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவுச் சின்னம் உள்ளிட்டவை புதிய நோட்டில் இடம்பெற்றுள்ளன.

புதிய நோட்டுகள் படிப்படியாக நாடு முழுவதும் புழக்கத்துக்கு வரும் என்றும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் இடம்பெற்றுள்ள பழைய நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.