யாழ். மனிதப்புதைகுழியில் இதுவரை 19 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழியின் பரீட்சார்த்த அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்தது. இதுவரை 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக
சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக நடைபெற்றது.
கடந்த ஒன்பது நாட்களாக பரீட்சார்த்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.
இன்றைய நிலையில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு குறிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிறைவு நாளில் 19 என்பு தொகுதிகளும் முழுமையாக அகழ்வு பணி செய்யும் இடத்திலிருந்து அகழப்பட்டு பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்படும்.
குறித்த பகுதி குற்றம் நிகழ்ந்த பிரதேசமான மனிதப் புதைகுழியாக நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை
சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கைக்மைய தொடர்ந்து 45 நாட்களுக்கு மேற்கொள்ள அதற்கான செலவு பாதீட்டை கால தாமதமின்றி ஒப்படைக்க கூறிய அடிப்படையில் பாதீடு இன்று கையளிக்கப்பட்டது.
நிதிகளை வழங்கும் அரச நிறுவனங்களிடம் பாதீடு கையளிக்கப்பட்டு இரண்டு வார கால அவகாசத்தில், உத்தேச திகதியாக ஜூன் மாதம் 20ஆம் திகதி மீளவும் அகழ்வாய்வு பணி ஆரம்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
பாதீட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டு நிதி அனுசரணை வந்த பின்னர் குறித்த திகதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படுமா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானித்து
அகழ்வில் பங்குபற்றும் தரப்பினருக்கு அறிவிக்கப்படும்.
அகழ்வு பணிகள் இன்று ஆரம்பித்த நேரத்தில் ட்ரோன் கமராவின் உதவியுடன் மேலுமொரு மனித புதைகுழி இருக்குமென சந்தேகப்படும் பகுதியில் படங்கள் எடுக்கப்பட்டு தற்போது ஆய்வுக்காக பேராசிரியர் ராஜ் சோமதேவாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த படங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு அது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – என்றார்.