;
Athirady Tamil News

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!

0

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானிக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.

கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கித் தீப்பற்றியது. இந்தக் கோர விபத்தில் 2 வயதுக் குழந்தை உள்பட 5 பக்தர்கள், விமானி, பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் என 7 பேர் பலியாகினர்.

ஹெலிகாப்டரை இயக்கிய விமானி ராஜ்வீர் சிங் செளகான், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ஆவார். 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய ராஜ்வீர், கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்ற பின்னர், ஆர்யன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

இவரது மனைவி தீபிகா செளகான், தற்போது ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

குழந்தைகள் பிறந்ததை கொண்டாடும் விதமாக வருகின்ற ஜூன் 30 ஆம் தேதி, பிரம்மாண்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ராஜ்வீர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், ராணுவ சீருடையில் கணவரின் இறுதி ஊர்வலத்தில் அவரின் புகைப்படத்தை ஏந்தியபடி, தீபிகா பங்கேற்றுள்ளார்.

ராஜஸ்தான் அரசு சார்பில் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.