;
Athirady Tamil News

செம்மணிப்புதைகுழி நீட்சி அறியப்பட வேண்டும்

0

செம்மணிப்புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் இனமுரண்பாடு தோன்றிய பின்னர் சிறுபான்மையின மக்கள் பல வழிகளிலும் பாதிப்புகளை எதிர் கொண்டனர். அவ்வப்போது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனக்கலவரங்களால் சிறுபான்மையினத்தவர் குறிப்பாகத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாகக் கொல்லப்பட்டதுடன் பெறுமதி மிக்க சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

இனமுரண்பாடு என்பது உருமாற்றம் பெற்று ஆயுதப் பிணக்காக மாற்றமுற்ற போது பல்வேறு வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. படுகொலைகள். சந்தேகத்தின் பெயரிலான கைதுகள், காலவரையறையற்ற தடுப்புகள், விசாரணையற்று அல்லது விசாரணை முடிவுறுத்தப்படாது திட்டமிட்டு இழுத்தடிப்புச் செய்யப்பட்ட சிறைவாசம், காணாமலாக்கப்படுதல் என்றவாறாக அடக்குமுறைகளின் வடிவங்கள் நீண்ட பட்டியலைக் கொண்டன.

தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்கு முறைகளில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயங்களாக இன்று வரையும் இருப்பவை சட்டத்தின் பிடியால் இறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பும் காணமால் போனவர்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையுமே. இவற்றுள்ளும் அதிக வலியையும் வேதனையையும் தருபவை காணாமலாக்கபட்டவர்களின் கதைகளே.

இவ்வாறானதொரு விடயப்பரப்பாக செம்மணிப் புதைகுழி விவகாரமும் விளங்குகின்றது. ஆயினும் தொடர்ந்தும் கைவிடப்படும் விடயமாக இனியும் இது மாறிவிடக்கூடாது எனும் அக்கறையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் வலுவாகப் பதிவு செய்கின்றோம்.

இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்த போது காணமால் ஆக்கப்பட்ட பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்பது தெரியாத அவலநிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும் நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர்கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

போருக்குப் பின்னரான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத்தாலும் அவை ஏதோவொரு விதத்தில் வெளிக்கிளம்பிய வண்ணமேயுள்ளன.

செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரியவகையில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலை வலுவாக்கப்படவேண்டும் என்பதுடன் புதை குழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது.

உரிய நிதியை உரிய காலத்தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது. இவ்விடயங்களில் எந்தவித நெகிழ்வுமற்று செயற்படவேண்டிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்குரியது – என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.