;
Athirady Tamil News

ஈரானைத் தாக்கக் கூடாது! அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

0

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.

அதற்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிருடன் இருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் போரில் கலந்துகொள்ள திட்டமிட்டு வருகிறது, ஈரானை எந்நேரமும் அமெரிக்கா தாக்கும் சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், ஈரானின் நட்பு நாடுகளான ரஷியாவின் அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் வியாழக்கிழமை தொலைபேசியில் சுமாா் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினா்.

தொடர்ந்து, இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்த இரு தலைவர்களும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தினர்.

இந்த நிலையில், ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஈரான் – இஸ்ரேல் போர் குறித்து செய்தியாளர்களுடன் பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், “ஈரானை அமெரிக்கா தாக்குவதை தவறான நகர்வு என்று ரஷியா எண்ணுகிறது. இது மேலும் போரை தீவிரப்படுத்தும். இத்தகைய மோதல் முழு பிராந்தியத்தையும் தீக்கிரையாக்கும்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் இஸ்ரேல், அமெரிக்கா திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கமேனியைக் கொன்றால், ஈரானில் பயங்கரவாதம் அதிகரிக்கும் என்பதை அவரைக் கொல்ல நினைப்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரான் அணு ஆயுதத்தை அடையக் கூடாது என்பதில் டிரம்ப் தெளிவாக இருக்கிறார், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் போரில் இணைவது குறித்து இன்னும் 2 வாரங்களில் டிரம்ப் முடிவெடுப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.