;
Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்! – ஈரானிய எம்பிக்கள் பரிந்துரை!

0

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்கக் கோரி, ஈரான் அரசுக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரின் ஒரு முக்கிய வியூகமாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் படைகள் முடக்கியுள்ளன.

எண்ணெய்க் கப்பல்களின் முக்கிய வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் அனுமதியின்றி அவ்வழியைக் கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்கக் கோரி, ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பிற்காகப் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க் கப்பல்களை அனுப்பவுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால், பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கப்பல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லா மோஜ்தபா கமேனி அறிவித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.